பொதுவாகவே கீரை உணவு வகைகள் உடம்புக்கு நல்லது. வெறும் கீரையாக அல்லாமல் அதனுடன் வேறு சில உணவு பொருட்களையும் இணைத்து சாப்பிடும்போது, அது கூடுதல் சுவையை அளிக்கும். அந்த வகையில், பாலக்கீரையுடன் சோயா உருண்டையைச் சேர்த்து செய்யப்படும் இந்த சோயா பாலக்கீரை கிரேவியைச் செய்வது எப்படி எனப் பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) – 20
பாலக்கீரை – 1 கட்டு
வெங்காயம், தக்காளி – தலா 1 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
இஞ்சி – தோல் சீவி துருவப்பட்டது – 1 டீ ஸ்பூன்
பூண்டு – 10 பல்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீ ஸ்பூன்
தனியா தூள் (மல்லித்தூள்) – 2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2
ஜாதிபத்திரி – சிறிய துண்டு
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு, உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும்.
மற்றொரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர்விட்டுச் சூடாக்கி, கொதிக்கும்போது பாலக்கீரையைச் சேர்த்து மூடி இறக்கவும். ஆறியதும் இலைகளை மட்டும் தனியாக மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சித் துருவல் சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் சோயா உருண்டைகள் மற்றும் அரைத்த பாலக்கீரை விழுது, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு
இந்த கிரேவி, சப்பாத்திக்கும் சாதத்துக்கு மிகவும் நன்றாக இருக்கும்.�,”