ஷங்கர் இயக்கத்தில் வெளிவர உள்ள 2.0 படம் எப்போது வெளிவரும் என்பது பற்றி ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும், அதன் கிராஃபிக்ஸ் பணிகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன. 2.0 படத்தின் படப்பிடிப்பை முடித்த ரஜினி, சில வாரங்கள் ஓய்வு எடுத்துவிட்டு, பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடிக்க ஆரம்பித்தார். மும்பை, சென்னை பகுதிகளில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு முடிவடைந்து ரஜினியின் டப்பிங் பகுதியும் நிறைவடைந்துள்ளது. தற்போது காலா படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ரஜினி நடிப்பில் ‘2.0’ மற்றும் ‘காலா’ என இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் உருவாகி வருவதால், இரண்டு படங்களில் எந்தப் படம் முதலில் வெளியாகும் என்ற ஒரு குழப்பம் ரசிகர்களிடம் இருக்கும் நிலையில், 2.0 படத்திற்கு முன்னதாகவே காலா படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே நமது [மின்னம்பலத்தில்](https://www.minnambalam.com/k/2018/02/07/58) பதிவு செய்திருந்தோம்.
இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் இன்று (பிப்ரவரி 8) செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது அவரிடம் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் எப்போது வெளியாகும்? காலா முதலில் வெளிவருமா? போன்ற கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ரஜினி “கிராஃபிக்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களில் அறிவிப்போம்” என சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.�,