ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிவரும் மிட்சல் ஸ்டார்க்கின் கான்ட்ராக்ட்டை தற்போது அந்த அணி ஒரு குறுஞ்செய்தியின் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான மிட்சல் ஸ்டார்க் கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின்போது கொல்கத்தா அணியால் ரூ.9.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். பின்னர் தென்னாப்பிரிக்காவுடன் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாடியபோது ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவரால் அந்தத் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. இதனையடுத்து இந்த ஆண்டின் ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்னதாக மிட்சல் ஸ்டார்க்கின் கான்ட்ராக்ட்டை ரத்து செய்வதாக கொல்கத்தா அணி அறிவித்துள்ளது. இந்தத் தகவலை ஒரு குறுஞ்செய்தியின் வாயிலாக அவருக்கு அனுப்பியுள்ளது.
கான்டராக்ட் ரத்து குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஊடகத்திடம் பேட்டியளித்த ஸ்டார்க், இரண்டு நாட்களுக்கு முன்பு கொல்கத்தா அணியின் உரிமையாளரிடமிருந்து எனக்குக் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் எனது கான்ட்ராக்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐபிஎல் தொடர் தொடங்கும் ஏப்ரல் மாதம் நான் எனது வீட்டில் இருப்பேன். காயத்தின் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் என்னால் பங்கேற்க முடியவில்லை. அந்த ஓய்வுதான் காயத்திலிருந்து நான் மீண்டு வர எனக்கு உதவியாக இருந்தது. 2019ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் நான் விளையாடாவிட்டால் அடுத்த ஆறு மாத காலம் உலகக் கோப்பை தொடர், ஆஷஸ் தொடர் ஆகியவற்றில் என்னால் முழு கவனத்தையும் செலுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் அட்டவணையும், உலகக் கோப்பை தொடரின் அட்டவணையும் அடுத்தடுத்து வருவதால் ஐபிஎல் அட்டவணையை முன்கூட்டியே தொடங்க தற்போது பிசிசிஐ திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.�,”