எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் காதலர்களைக் கொன்ற நபருக்கு தேனி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, தமிழகத்திலுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று. கடந்த 2011ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவியான கஸ்தூரி மற்றும் அவரது காதலன் எழில் முதல்வன் ஆகியோர், சுருளி அருவியிலிருந்து கைலாசநாதர் குகைக் கோயிலுக்குச் செல்லும் காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்தனர் சிபிசிஐடி போலீசார்.
கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த திவாகர் என்ற கட்டவெள்ளை என்பவரிடம் விசாரணை செய்தபோது, காதலர்கள் இருவரும் காட்டுக்குள் தனிமையில் இருந்தபோது அவர்களை மிரட்டிப் பணம் பறித்தது தெரிய வந்தது. கஸ்தூரியைப் பாலியல் வன்கொடுமை செய்த திவாகர், அதைத் தடுக்க முயன்ற எழில் முதல்வனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். அதன்பின்னர், அவர் கஸ்தூரியையும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். நீதிமன்ற விசாரணையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த வழக்கில் தீர்ப்பளித்த தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம்,
திவாகர் என்ற கட்டவெள்ளையைக் குற்றவாளி என அறிவித்தது. அவருக்கு 7ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஒரு ஆயுள் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உறுதி செய்யக் கோரி தேனி மாவட்ட நீதிமன்றமானது உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அனுப்பி வைத்தது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சுப்பையா மற்றும் புகழேந்தி ஆகியோர் விசாரணை செய்து, இதன் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.
இந்த வழக்கில் இன்று (மார்ச் 13) தீர்ப்பு வழங்கினர் நீதிபதிகள். அப்போது, தேனி மாவட்ட நீதிமன்றம் விதித்த தண்டனைகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் திவாகர் என்ற கட்டவெள்ளைக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ஒரு ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை ஆகியன உறுதி செய்யப்பட்டன.
�,