கச்சா எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா உலகளவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி அடுத்த ஆண்டிலும் வலுவாக உயரும் என்று அமெரிக்க அரசு கணித்துள்ளது. அமெரிக்காவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் தடைகள் இருந்தாலும்கூட, எண்ணெய் உற்பத்தி வலுவாக உயரும் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மின்சக்தி தகவல் நிர்வாகம் (Energy Information Administration) அளித்துள்ள தகவலின் படி, அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஜூன் மாதத்தில் ஒரு நாளைக்கு 11.76 மில்லியன் பேரல்களாக இருந்துள்ளது. ஆனால், ஜூலை மாதத்தில் ஒரு நாளைக்குச் சராசரியாக 11.8 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மின்சக்தித் தகவல் நிர்வாகத்தின் நிர்வாகத் தலைவரான லிண்டா கபானோ செய்தியாளர்களிடம் பேசுகையில், “2019ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்குச் சராசரியாக 12 மில்லியன் பேரல்களாக இருக்கும் என்று மின்சக்தி தகவல் நிர்வாகம் கணித்துள்ளது. இந்தக் கணிப்பின் படி உற்பத்தி உயர்ந்தால், உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் முதலாகவே அமெரிக்காவின் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு 10 மில்லியன் பேரல்களுக்கும் அதிகமாகவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.�,