Oஐஐடி : உயரும் எம்.டெக் கட்டணம்!

Published On:

| By Balaji

இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐடி) அடுத்த மூன்று ஆண்டுகளில் எம்.டெக் கல்விக் கட்டணத்தை பத்து மடங்கு உயர்த்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐஐடி கல்வி நிறுவனங்களில் இடைநிற்றலை தவிர்க்கவும், எம்.டெக் கல்வியில் தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சார்பில் டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஐஐடிகளில் சேர்ந்து முதுகலை பட்டம் படிக்க வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. இந்நிலையில் ஐஐடி நிறுவனங்களில் எம்.டெக் படிப்புக்கான கல்விக்கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்த இந்த குழு பரிந்துரைத்துள்ளது.

தற்போது வரை ஐஐடிகளில் ஆண்டுக்கு ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை 10மடங்கு வரை உயர்த்த ஐஐடி கவுன்சில் முடிவு செய்திருக்கிறது. அதாவது தற்போது பி.டெக் கட்டணம் என்பது ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அதற்கு இணையாக எம்.டெக் கட்டணமும் உயர்த்தப்பட இருக்கிறது.

இதுமட்டுமின்றி 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் கேட் தேர்வு அடிப்படையில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை 12,400 ரூபாயையும் நிறுத்த ஐஐடி கவுன்சில் முடிவு செய்துள்ளது. 2019ல் ஐஐடிகளில் சேர்ந்த 12,000 எம்.டெக் மாணவர்களில் 9,280 பேர் கேட் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று ஐஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமின்றி ஐஐடிக்களில் பணிபுரியும் பேராசிரியர்களின் தரத்தையும் மதிப்பீடு செய்ய இக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி பணியில் சேர்ந்தது முதல் ஐந்தரை ஆண்டுகள் வரை, ஒரு பேராசிரியர் எப்படி பணிபுரிந்துள்ளார் என்பதை ஆராய்ந்து பதவி உயர்வு அல்லது பணி நீக்கம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் 2020 முதல் தொடங்கி அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாகக் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share