ரேஷன் கடைகளில் இலவச அரிசியானது வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத் என்பவர், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டார். அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரைச் சிறையிலடைக்க, கடந்த ஆகஸ்ட்31ஆம் தேதியன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அமர்நாத்தின் மனைவி சவுஜன்யாசென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அமர்வு, “கடந்த10 ஆண்டுகளில் ரேஷன் அரிசி கடத்தலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன” என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியது. இது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார் நீதிபதி.
இந்த வழக்கு மீண்டும் இன்று (நவம்பர் 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்தாண்டு மட்டும் இலவச அரிசித் திட்டத்திற்காக 2,110கோடி ரூபாய் செலவிட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 31 அரசு ஊழியர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஏழை மக்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டிய இந்த திட்டம் அனைத்து தரப்பு மக்களுக்கும் செயல்படுத்தப்படுவதால், மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுவதாகக் கண்டனம் தெரிவித்தனர் நீதிபதிகள்.
“இனிவரும் காலங்களில் இலவச ரேஷன் அரிசி வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.
ரூ. 2,110 கோடி பணத்தைக் கொண்டு மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியிருந்தால், அனைவரும் பயனடைந்து இருப்பார்கள்” என்று கூறினர் நீதிபதிகள். தேர்தல் லாபத்திற்காக இலவசங்களை வாரி வழங்கி மக்களைக் கையேந்தும் நிலைக்குத் தள்ளிவிட்டதாக அதிருப்தி தெரிவித்தனர்.
தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள்தொகை குறித்தும், அவர்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்கப்பட்டால் ஆகும்செலவு குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.�,