ஆறு மாதத்தில் தமிழ் பேசுவேன்!

Published On:

| By Balaji

G

தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தை இன்று (நவம்பர் 11) சந்தித்து அவருக்குத் திருவள்ளுவர் ஓவியத்தைப் பரிசளித்திருக்கிறார் எழுத்தாளரும் இயக்குனருமான ஸ்ரீராம் சர்மா. இவர் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்த மறைந்த ஓவிய மேதை வேணுகோபால் சர்மாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், ‘ஆளுநர் பன்வாரிலால் தமிழ் கற்பதில் ஆர்வமாக இருக்கிறார். அவர் தற்போது தமிழ் கற்று வருகிறார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆளுநரைச் சந்தித்துப் பேசிய ஸ்ரீராம் சர்மா, “தாங்கள் கற்றுவரும் தமிழின் பேராசான் இவர்தான்” என்று திருவள்ளுவரைப் பற்றிக் குறிப்பிட்டு ஓவியத்தை வழங்கியிருக்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட ஆளுநர், “இது எனக்கு விலைமதிப்பில்லாத பரிசு. இதை எனது மேஜையிலேயே வைத்துக்கொள்கிறேன்” என்று கூறிப் பெற்றுக்கொண்டார்.

ராஜ்பவனுக்குப் பக்கத்திலேயே இருக்கும் ஒரு தமிழாசிரியரிடம் மாலை ஒரு மணி நேரம் தமிழ் கற்றுவருவதாகவும், தமிழ் மிக இனிமையான மொழியாக இருப்பதாகவும் ஸ்ரீராம் சர்மாவிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் ஆளுநர் பன்வாரி லால்.

விடைபெறும் போது, “தினமும் ஒரு மணி நேரம் தமிழ் கற்பதோடு சிறு சிறு வார்த்தைகளையும் பேச முயற்சித்துவருகிறேன். இன்னும் ஆறு மாதத்தில் தமிழில் பேசுவேன்” என்று கூறினாராம் ஆளுநர்.

விரைவில் சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் தமிழில் பேசினாலும் ஆச்சரியம் இல்லை.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share