Oஆர்டிஐ தகவலுக்கு ஜிஎஸ்டி வரி!

Published On:

| By Balaji

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரி மனு தாக்கல் செய்தவரிடம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் ஊழல் எதிர்ப்பு ஆர்வலரான அஜய் துபே. இவர் மாநில வீட்டு வசதி மற்றும் கட்டுமான மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து பல்வேறு தகவல்களைக் கோரி, ஆர்டிஐ சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார்.

மாநிலத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கான தலைமை அலுவலகத்தைப் புனரமைத்தது, புதிய கட்டடங்கள் கட்டியது உள்ளிட்டவற்றின் செலவு எவ்வளவு என்பது தொடர்பான தகவல்களை அவர் கேட்டிருந்தார். அதற்கு, ஜிஎஸ்டி வரி செலுத்தினால் மட்டுமே தகவல் அளிக்கப்படும் என அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அவரது மனுவின்படி தேவையான சேவை மற்றும் உரிய ஆவண நகல்களைப் பெறுவதற்கும் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ பதில் ஆவணத்தின்படி, 43 ரூபாய் கட்டணத்தை துபே செலுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேவையான 18 பக்கங்களை நகலெடுக்க ரூ.36 கட்டணம், மாநில மற்றும் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.7 என மொத்தம் ரூ.43 கட்டணம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அஜய் துபே கூறியபோது, “பொதுவாக ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவதற்கு சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி என வசூலிப்பது நியாயமற்றது மற்றும் சட்டவிரோத நடவடிக்கையுமாகும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் எனது தரப்பு கோரிக்கையை முன்வைப்பேன்” என்று தெரிவித்தார்.

ஆர்டிஐ சேவைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்களிப்பதற்கு கடந்த ஜனவரி மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. அதேபோன்று தகவல் வழங்குவதற்கு விலை நிர்ணயிக்க முடியாது என்று மத்திய தகவல் குழு பிப்ரவரி மாதம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share