குடியரசு தின ஊர்வலத்தில் இடம்பெற்ற அய்யனார் சிலைக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது ஏன் என சிலையை வடிவமைத்த டில்லி பாபு விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் இன்று (ஜனவரி 26) நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் ராஜபாதையில் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா மற்றும் அசாம் போன்ற 16 மாநிலங்களின் சார்பில் கலாச்சாரம் மற்றும் கலைத் திறனை வெளிப்படுத்தும் விதத்தில் அலங்கார ஊர்திகள் பேரணியாக சென்றன. தமிழ்நாட்டு வாகனத்தில் இடம்பெற்ற தமிழர்களின் காவல் தெய்வமாக வணங்கப்படும் அய்யனாரின் பிரம்மாண்ட சிலை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. வாகனத்திற்கு முன் 30க்கும் மேற்பட்ட ஒயிலாட்டம் ஆடும் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
முன்னதாக அய்யனார் சிலை பூணூல் அணிந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. பொதுவாகவே தமிழக கிராமங்களின் காவல் தெய்வமாக வழிபடப்படும் பழங்கால அய்யனார் சிலைகளில் இதுபோன்று பூணூல் இருப்பது இல்லை. ஏற்கனவே திருவள்ளுவருக்கு பூணூல் அணிவித்தால் சர்ச்சைகள் எழுந்த நிலையில், இதுபோன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒத்திகையின்போது அய்யனார் பூணூலுடன் வருவது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. காவல் தெய்வமான அய்யனார் எப்போது பூணூல் அணிந்திருந்தார் என பலரும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இதனை தெளிவுபடுத்தும் விதமாக அய்யனார் சிலையை வடிவமைத்தவர்களில் ஒருவரான சென்னை மாங்காடு அருகே உள்ள கோவூர் கிராமத்தை சேர்ந்த டில்லி பாபு ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியளித்துள்ளார். “இரண்டு கை மற்றும் வேலுடன் கூடிய அய்யனார் என்றால் பூணூல் இடம்பெற்றிருக்காது. ஆனால், இந்த அய்யனார் சிவனுடைய அம்சம் என்பதால் பூணூல் அணிவித்தபடி இருக்கிறது என்று விளக்கமளித்தார். 17 அடி உயரம் கொண்ட இச்சிலையைச் சுற்றி குதிரைகள், காவலர்கள் இருப்பது போல் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
�,