குடியரசுத் தலைவர் பதவியை எனக்கு வழங்கிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன், இந்த பொறுப்பை உணர்ந்து திறம்பட செயல்படுவேன் என்று, குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜக்தீஷ் சிங் கெஹர் ராம்நாத் கோவிந்துக்கு குடியரசு தலைவராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற பின் அங்கு கூடியிருப்பவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,’மண் குடிசையில் பிறந்த நான், இன்று நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்துள்ளேன். மிகவும் ஏழ்மை நிலையில் பிறந்த எனது வாழ்க்கை பயணம் மிகவும் கடுமையானது. சாதாரண குடிமக்களே இந்த நாட்டை செதுக்குகின்றனர். முந்தைய குடியரசுத் தலைவர்கள் வழியில் எனது பணியை திறம்பட செய்வேன். நாட்டின் முழுமையான வளர்ச்சியையே டாக்டர் அம்பேத்கர் விரும்பினார். எனவே அம்பேத்கரின் எண்ணத்தை செயல்படுத்துவேன். குடியரசுத் தலைவர் என்னும் மிகப்பெரிய பொறுப்பை அடக்கத்துடன் ஏற்றுக்கொண்டு திறம்பட செயல்படுவேன்.
நாட்டில் பல மதங்களும், ஜாதிகளும் இருந்தாலும் கூட மக்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். இப்படிப்பட்ட பெருமைமிகு நாட்டில் குடியரசு தலைவராவதில் பெருமை கொள்கிறேன். விவசாயத்தைப் பொறுத்தவரை ஆண்களோடு, பெண்களும் அதிகமாக உழைக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சியில் அரசாங்கம் மட்டுமே காரணியாக இருக்க முடியாது , மக்களின் பங்களிப்பும் மிக அவசியம். இந்த குடியரசு தலைவர் பொறுப்பை எனக்கு வழங்கிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன். நாம் சில கருத்துக்களை ஏற்கலாம், சில கருத்துக்களை மறுக்கலாம், ஆனால் பிறருடைய கருத்தைக் கேட்க வேண்டும். இதுதான் ஜனநாயகத்தின் பண்பு’ என்று குறிப்பிட்டுள்ளார்.�,