Oஅமராவதி அணையில் நீர் திறப்பு!

Published On:

| By Balaji

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி அணை, திருமூர்த்தி அணை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தைத் திறப்பது தொடர்பாக, இன்று (ஜூலை 20) ஆணை வெளியிட்டார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தொடர்ந்து வருவதால், அங்குள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் கணிசமான அளவில் உயர்ந்ததையடுத்து, வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் அணையில் நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அப்பகுதியிலுள்ள 8 கால்வாய் பாசனத்திற்காக, வரும் நவம்பர் 19ஆம் தேதி வரை, அமராவதி அணையில் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக, சுமார் 7520 ஏக்கர் நிலங்கள் குறுவைச் சாகுபடிக்கான பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, முதலமைச்சரின் உத்தரவினால் திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமூர்த்தி அணையிலும் அடுத்த வாரம் நீர் திறந்துவிடப்படுகிறது. ஜூலை 27ஆம் தேதி முதல் உரிய இடைவெளியில் இங்கு நீர் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களிலுள்ள சுமார் 95,421 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் ஜூலை 25 முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை சுழற்சி முறையில், இரண்டு பிரதானக் கால்வாய்களிலும் 150 நாட்கள் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனால் ஓசூர் வட்டாரத்திலுள்ள 8,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்த நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மூலமாக அதிக மகசூலை விவசாயிகள் ஈட்ட வேண்டுமென்று தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share