விபத்திற்கு காரணமான அதிமுக கொடிக் கம்பம்: முதல்வர் பதில்!

Published On:

| By Balaji

கோவையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக் கம்பம் விழுந்து ஏற்பட்ட விபத்தில், லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் படுகாயமடைந்தார்.

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா. 30 வயதாகும் இவர் கோகுலம் பார்க்கிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். நேற்று அவர் தனது இருசக்கர வாகனத்தில் நீலாம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவினாசி சாலையில் நட்டுவைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிகம்பம் திடீரென சரிந்து விழுந்துள்ளது. அது தனது வண்டியில் விழாமல் இருக்க அனுராதா பிரேக் பிடிக்க எத்தனித்தபோது நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.

அந்த சமயத்தில் அவ்வழியாகச் சென்ற லாரி ஒன்று அனுராதாவின் கால்களின் மீது ஏறியதில் அவர் பலத்த காயமடைந்தார் . அருகிலிருந்தவர்கள் அனுராதாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அனுராதா விபத்தில் சிக்கியதற்கு அதிமுக கொடிக்கம்பம் கீழே விழுந்ததே காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். “அனுராதா விபத்தில் சிக்கிய தகவலை அவருடன் பணியாற்றுபவர்களுக்கு எங்களுக்குத் தெரிவித்தனர். அவருக்கு ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இன்னொரு காலில் நரம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதற்காக 7 மணி நேரம் வரை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். தொற்று இல்லை என்றால் நரம்புகளை இணைப்பதற்கான அறுவை சிகிச்சை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

அனுராதா மட்டும்தான் அவருடைய குடும்பத்தில் வேலைக்கு செல்லும் ஒரே நபர், அவருடைய வருமானத்தை நம்பியே குடும்பத்தின் வாழ்வாதாரம் இருந்துவந்தது. சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனுராதாவின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக லாரி டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். காவல் துறையிடம் முறையாக அனுமதி பெற்றே கொடிகம்பம் வைக்கப்பட்டதாக பீளமேடு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவையில் அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததே காரணமெனவும், அதனை காவல்துறையினர் மறைப்பதாகவும் புகார்கள் எழுகின்றன. அதிமுக-வினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே பள்ளிக்கரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்லத் திருமண நிகழ்வுக்காக சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் கீழே விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பேனர், கட்-அவுட்கள் வைக்க மாட்டோம் என அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததோடு, தொண்டர்களுக்கும் உத்தரவிட்டனர். இந்த நிலையில் அதிமுக கொடிகம்பம் சாய்ந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “கொடி கம்பம் நட வேண்டாம் என நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை” என்று பதிலளித்துள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share