நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் மரணத்தை மையக்கருவாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘நுங்கம்பாக்கம்’ படத்திற்கு தடை கோரி ராம்குமாரின் தந்தை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மென்பொறியாளரான சுவாதி என்ற இளம்பெண் நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த பொறியியல் மாணவரான ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன் மகனின் மரணத்தில் சந்தேகம் கொண்ட ராம்குமாரின் தந்தை இது தொடர்பாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் ரமேஷ் என்பவர் இந்த சம்பவங்களை மையமாக வைத்து ‘நுங்கம்பாக்கம்’ என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.
அந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ‘தன் மகன் மீது எந்த தவறும் இல்லை, ராம்குமார் ஒரு அப்பாவி. இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான ஆணைய விசாரணைகள் நிலுவையில் உள்ளது. தன் மகனின் மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து சட்டப்போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த படம் வெளியிடப் பட்டால் அதன் விசாரணை பாதிக்கும் மேலும் உண்மை நிலை வெளியில் தெரியாத நிலையும் ஏற்படும். எனவே இந்த திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான விசாரணை ஆணையம் ராம்குமாரின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதால் இந்த வழக்கில், நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
�,