போதைப்பொருள் வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் போதைப் பொருள் புழக்கமிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. சுஷாந்த் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்திக்கு போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
போதைப் பொருட்களைப் பரிமாறிக் கொள்வதற்கு என்று பாலிவுட் வட்டாரத்தில் ஒரு வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டு அதன் உறுப்பினராக ரியா இருந்ததாகக் கூறப்பட்டது. எனவே, சுஷாந்த்தின் மரணம், போதைப் பொருள் வழக்கு என சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய முகமைகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பாக ரியா மற்றும் அவரது சகோதரர் சோவிக், சுஷாந்த்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் நடிகை தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததுடன் அக்டோபர் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்தது.
இந்நிலையில் ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் ரியாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அதே சமயம் அவரது சகோதரர் சோவிக்கிற்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ரியா மீது எந்த கிரிமினல் குற்றங்களும் இல்லாததால் ஜாமீன் காலத்தில் அவர் எந்த குற்றமும் செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து, “ரியா நிபந்தனை தொகையாக ரூ.1 லட்சம் பத்திரமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.விடுவிக்கப்பட்ட 10 நாட்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் தினமும் ஆஜராக வேண்டும். ரியா தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். நீதிமன்றம் அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது.
ரியாவின் வழக்கறிஞர் சதிஷ் மணிஷிண்டே ஜாமீன் குறித்து பேசுகையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. ரியா கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டது சட்டத்துக்குப் புறம்பானது. சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் ஆகிய மூன்று மத்திய நிறுவனங்கள் மூலம் ரியா துரத்தப்பட்டது முடிவுக்கு வந்துள்ளது. உண்மையே வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.
ரியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதை எதிர்த்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளதாகக் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பல சட்ட கேள்விகளை உள்ளடக்கியது என்பதால் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**�,