�கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக நடுவானில் நிலைதடுமாறிய இந்திய விமானத்துக்கு பாகிஸ்தான் விமானக் கட்டுப்பாட்டு அறை உதவியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி நடத்தப்பட்ட பால்கோட் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் சிறிது காலம் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், காஷ்மீர் விவகாரத்துக்குப் பிறகு குறிப்பாக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் செல்லும் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெய்ப்பூர்-மஸ்கட் செல்லும் இந்திய விமானம் ஒன்று கடந்த வியாழன் அன்று 150 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது. அப்போது மோசமான வானிலை காரணமாக நிலை தடுமாறியுள்ளது. 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் 34,000 அடிக்கு இறங்கியுள்ளது. தெற்கு சிந்து மாகாணத்தின் சோர் பகுதி அருகே இந்த விமானம் அசாதாரண வானிலையை எதிர்க்கொண்டதாக விமானப் போக்குவரத்து ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.
அப்போது “மேடே” எனப்படும் அவசர செய்தியை அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு பைலட் அனுப்பினார். நிலைமையை அறிந்த பாகிஸ்தான் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் விமானியின் அழைப்புக்குப் பதிலளித்து உதவியுள்ளார். பாகிஸ்தான் வான்வெளியில் பயணத்தின் எஞ்சிய பகுதிக்கு அருகில் அடர்த்தியான விமானப் போக்குவரத்து வழியாக அதை இயக்க உதவியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அந்த விமானம் சரியான வழியில் பயணித்துள்ளது.�,