தீர்ப்பை எதிர்த்து சீராய்வுக்கு செல்லமாட்டோம்: சன்னி வஃக்ப் வாரியம்!

Published On:

| By Balaji

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யமாட்டோம் என உத்தர பிரதேச சன்னி வஃக்ப் வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். அந்த அறக்கட்டளையிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படவேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், இந்தத் தீர்ப்பு தங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்று தெரிவித்த முஸ்லீம் அமைப்பான சன்னி வஃக்ப் வாரியத்தின் வழக்கறிஞர் ஜிலானி, தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சன்னி மத்திய வஃக்ப் வாரியத்தின் தலைவர் ஜாபர் பஃரூகி, “அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதுடன் அதனை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம். உத்தர பிரதேச சன்னி வஃக்ப் வாரியத்தின் தலைவர் என்கிற முறையில் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நாங்கள் சீராய்வு மனுவோ அல்லது வேறு எந்த மனுக்களோ தாக்கல் செய்யமாட்டோம். எனினும் எந்தவொரு தனிநபரோ, வழக்கறிஞரோ அல்லது அமைப்போ சன்னி வஃக்ப் வாரியம் சீராய்வு மனு தாக்கல் செய்யும் என்று கூறினால் அது எங்களுடைய வார்த்தைகள் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை தற்போது உச்ச நீதிமன்றம் மாற்றித் தந்துள்ளதற்கு எங்களது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share