�அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது: நிர்மலா சீதாராமன்

Published On:

| By Balaji

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இந்த நிலையில் ‘அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இரண்டு பொதுத்துறை வங்கிகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் அறிவிப்பினை வெளியிட்ட நிலையில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மார்ச் 15, 16ஆம் ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.

இதுகுறித்து மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வங்கி ஊழியர்கள் அறிவித்தபடி கடந்த இரண்டு நாட்கள் (மார்ச் 15, 16) வேலைநிறுத்தம் செய்தனர். இந்த நிலையில் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் ஊழியர்களின் நலன், ஓய்வூதியம் பாதுகாக்கப்படும். வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால்கூட, தனியார்மயமாக்கப்பட்ட நிறுவனங்களும் தனியார்மயமாக்கலுக்குப் பிறகு செயல்படப் போகின்றன என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

தனியார்மயமாக்கப்படக்கூடிய வங்கிகளின் தொழிலாளர்களின் நலன்கள் முற்றிலும் பாதுகாக்கப்படும். அவர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அனைத்துமே கவனிக்கப்படும். நாங்கள் ஒரு பொது நிறுவனக் கொள்கையை அறிவித்துள்ளோம். அங்கு பொதுத்துறை இருப்பு இருக்கும் நான்கு பகுதிகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், இதில் நிதித் துறையும் உள்ளது. அனைத்து வங்கிகளும் தனியார்மயமாக்கப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்கள் நடந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுமார் 10 லட்சம் பணியாளர்கள் ஈடுபட்டனர். தமிழகத்தில் 16,000 வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தன. வங்கி சேவை முடங்கியதால் காசோலை பரிவர்த்தனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் பல்வேறு ஏடிஎம்களில் இரண்டு நாட்கள் பணம் நிரப்பப்படவில்லை. இதேபோல் வங்கி ஊழியர்களின் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் வங்கிகள் செயல்படாததால் ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படவில்லை. இதன் காரணமாக ஏராளமான ஏடிஎம்களில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

**-ராஜ்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share