pதமிழகம்: நாளை முதல் பருவமழை தீவிரமடையும்!

Published On:

| By Balaji

தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் நாளை (அக்டோபர் 29) முதல் தமிழகத்தில் பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (அக்டோபர் 28), இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “தென்மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திரா பக்கம் சென்று வலுவிழந்த நிலையில், அரபிக் கடலில் புதிய புயல் உருவாகியது.தற்போது வங்கக் கடலில், தென்மேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை தீவிரமடையும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த இரண்டு தினங்களுக்கு தென்தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மணப்பாறை பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. மணப்பாறை பகுதியில் நிலவி வரும் வானிலை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து, அங்குள்ள மீட்புப் படையினருக்குத் தெரிவித்து வருகிறோம். மன்னார் வளைகுடா, தென்தமிழக கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதி மற்றும் மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share