தென்கொரியா எல்லை அருகே பீரங்கி குண்டுகளை சோதனை நடத்திய வடகொரியா

Published On:

| By admin

உலகமே கொரோனா பெருந்தொற்றாலும், ரஷ்யா – உக்ரேன் போரினாலும் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. மேலும் பல நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. உலகமே தற்பொழுது கொரினாவிலிருந்தும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் மீண்டு வருகையில், வடகொரியா அவ்வப்பொழுது ராணுவ சோதனைகளை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தென்கொரியா எல்லைக்கு அருகே பீரங்கி குண்டுகள் சோதனையை நடத்தி வடகொரியா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் தென்கொரியா எல்லைக்கருகில், வடகொரியா ராணுவ பீரங்கி குண்டுகளை வீசி சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரிய எல்லையில் இருந்து 40 முதல் 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தென் கொரியா எல்லையில் இந்த சோதனை நடைபெற்று உள்ளது. மேலும் அதிக மக்கள் தொகை கொண்ட தென் கொரியாவின் எல்லையருகே இந்த சோதனை நடத்தப்பட்டது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் கடந்த வாரம் நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் ராணுவ திறனை அதிகரிப்பதாக உறுதிமொழி எடுத்தார். வடகொரியா தொடர்ந்து ஆயுத சோதனைகளை நடத்தி வருவதால், அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், தென்கொரியாவும் கண்காணிப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பீரங்கி குண்டுகள் சோதனை குறித்து தென்கொரிய ராணுவம் கூறுகையில், “தென்கொரியா தனது நாட்டின் ராணுவ தயார் நிலையை உறுதிப்படுத்த அமெரிக்க நாட்டுடன் நெருங்கிய தொடர்பில் ஒருங்கிணைந்து ஈடுபடுகிறது. மேலும் வடகொரியா மீது கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தென் கொரியா எல்லைப் பகுதியில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் சில மணி நேரங்களுக்கு தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.