தமிழகத்தில் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடைபெறும்போதும், முடிவுகள் வெளியாகும்போதும் தோல்வி பயம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது தொடர்கதையாகிவிட்டது.
‘அம்மா டாக்டராகி, உனக்கு ஊசி போடுவேன்’ என இந்த குழந்தைகளின் மருத்துவ கனவு தொடங்கி, தற்போது நீட் காரணமாக அக்கனவு நிறைவேறாததால் விபரீத முடிவை எடுக்கின்றனர்.
2017ல் நடந்த அனிதா தற்கொலை உள்படக் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தது 17 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். செஞ்சியை அடுத்த பெரவளூர் பிரதீபா, திருச்சி சுபஸ்ரீ, சென்னை சேலையூரைச் சேர்ந்த ஏஞ்சலின் சுருதி, திருப்பூர் ரிது ஸ்ரீ, மரக்காணம் கூனிமேடு மோனிசா, பட்டுக்கோட்டை வைஸ்யா, நெல்லை தனலட்சுமி, கோவை ஆர்.எஸ்.புரம் சுப ஸ்ரீ, மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, செந்துறை விக்னேஷ், தருமபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால், மேட்டுரைச் சேர்ந்த தனுஷ் , அரியலூரைச் சேர்ந்த கனிமொழி, வேலூரைச் சேர்ந்த சௌந்தர்யா ஆகியோர் உயிரிழந்தனர்.
தற்போது 17ஆவது மாணவியாக ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த அனுசுயா நீட் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டு இன்று (அக்டோபர் 16) உயிரிழந்தார்.
ஊரப்பாக்கம் அருகே உள்ள அய்யஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன். சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி ஷீபா, மாடம்பாக்கம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
ஆசிரியர்கள் தம்பதியினரின் மகளான அனுசுயா, தனது தந்தை வேலை செய்யும் பள்ளியிலேயே பிளஸ் 2 முடித்து, முதன்முறையாகக் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ஆவடி மையத்தில் எழுதினார்.
தேர்வைச் சரியாக எழுதவில்லை என வருத்தத்திலிருந்த அனு, இணையத்தில் நீட் வினாத் தாள் கேள்விகளுக்கான விடையைச் சரிபார்த்தார். இதில் அவருக்கு நீட் மதிப்பெண் குறையும் என தெரியவந்துள்ளது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட அனு, கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி பெற்றோர் வெளியில் சென்றிருந்த போது மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றித் தீக்குளித்தார். பின்னர் எரிச்சல் தாங்க முடியாமல் கத்தியதும், அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
40 சதவித தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து மாணவிக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தினார். மாணவியின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதலும் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த ஒரு மாதமாக மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி அனு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
அனுசுயாவின் மரணம் பெற்றோர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடந்த நீட் தேர்வை எழுதிவிட்டு, முடிவுக்காகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் முடிவு எப்படி வந்தாலும் அதனைத் திடமாக எதிர்கொள்ள வேண்டும், அதைத் தவிர்த்து இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என்பது பெற்றோர்களின் அன்பான வேண்டுகோளாக உள்ளது.
**-பிரியா**
�,