பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவதில்லை – அதிகாரிகள் விழிப்புணர்வு!

Published On:

| By admin

நாடு முழுவதும் கொரோனா 4ஆவது அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 40 பேராக இருந்த தினசரி பாதிப்பு தற்போது 70ஐ தாண்டி இருக்கிறது. இருப்பினும் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. இப்படி அதிகரித்து வரும் கொரோனா தொற்று பெருமளவில் கூடிவிடக் கூடாது என்பதற்காக பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அபராதம் வசூலிக்கும் முறையை அதிகாரிகள் தொடங்கவில்லை. இதன் காரணமாக பொது இடங்களில் பெரும்பாலானோர் மாஸ்க் அணியாமல் சுற்றுகிறார்கள். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

கொரோனா 3வது அலை ஓய்ந்து கடந்த சில மாதங்களாகவே மாஸ்க் அணியாமல் பழகிவிட்ட மக்கள் மீண்டும் மாஸ்க் அணிவதற்கு தயங்கும் நிலையே காணப்படுகிறது. கொரோனா பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் முன்பு போலவே இல்லாததும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் மார்க்கெட், பெரிய மால்கள், கோவில்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களில் கூடும் மக்களில் பெரும்பாலானவர்கள் மாஸ்க் அணியாமல் சுற்றுவதையே காணமுடிகிறது.

இது தொடர்பாக போலீசாரிடம் பேசுகையில், “மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் முறை மீண்டும் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே பொதுமக்கள் அபராதத்துக்கு பயந்து மாஸ்க் அணிவார்கள். கொரோனா பரவலின் வேகம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்.” என்று தெரிவித்தனர்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share