சிறப்புக் கட்டுரை: வறுமை நோய்க்குக் கொள்கை மருந்து!

Published On:

| By Balaji

நா. ரகுநாத்

பொருளியல் துறையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டுஃப்ளோ மற்றும் மைக்கேல் கிரேமர் எனும் மூன்று மேம்பாட்டு பொருளியல் (development economics) ஆய்வறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொருளியல் துறையில் இவர்களுடைய பங்களிப்பு என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, பொருளியல் துறைக்கான நோபல் பரிசு எவ்வாறு பிறந்தது என்ற வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவசியம்.

**பொருளியல் நோபல் பின்னணி**

‘மானுடம் பயன்பெறும் வண்ணம் வேதியியல், இலக்கியம், இயற்பியல், மருத்துவம், உலக அமைதி ஆகிய துறைகளில் மிகச்சிறந்த பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் அந்தத் துறைகளுக்கான பரிசு ஒன்றை ஒவ்வோர் ஆண்டும் வழங்க வேண்டும்’ என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பொறியாளர் மற்றும் தொழிலதிபரான ஆல்ஃபிரட் நோபல் எனும் நபரின் உயிலில் எழுதப்பட்டிருந்தது போல், வேதியியல், இலக்கியம், உலக அமைதி, இயற்பியல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளுக்கான பரிசுகள் 1895ஆம் ஆண்டு நிறுவப்பட்டன. 1901இல்தான் முதன்முறையாக நோபல் பரிசு வழங்கப்பட்டது. தன்னுடைய உயிலில் பொருளியல் துறையை அவர் குறிப்பிடவே இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஸ்வீடன் நாட்டின் சமூக – ஜனநாயகவாதிகள் (social democrats) மற்றும் சந்தைப் பொருளாதாரம் மீது நம்பிக்கைகொண்ட தொழிலதிபர்கள், வணிகர்கள் இவ்விருவருக்கும் ஏற்பட்ட கருத்தியல் அடிப்படையிலான மோதல்கள் தீவிரமடைந்ததன் விளைவாகத்தான் பொருளியலுக்கான நோபல் பரிசு பிறந்தது. மக்களின் நலனுக்காக அரசு பல தளங்களில் செலவு செய்ய வேண்டும் என்று கிளம்பிய சமூக – ஜனநாயகவாத அரசின் போக்கு, அந்த நாட்டு மைய வங்கியின் (central bank) ஆளுநருக்குப் பிடிக்கவில்லை. அவர் ஒரு கட்டத்தில் அரசோடு கலந்தாலோசிக்காமலேயே வட்டிவிகிதத்தை அதிகமாக உயர்த்தினார். இது அரசுக்கும் மைய வங்கிக்கும் இடையே விரிசல்களை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில்தான் தொழிலதிபர்கள், வணிகர்கள் மற்றும் மைய வங்கி தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்யும் வண்ணம் இருவரும் ஒன்று சேர்ந்து பொருளியலுக்கான நோபல் பரிசு ஒன்றை நிறுவ முடிவு செய்தனர்.

1968இல் ஆஃல்பிரட் நோபலின் நினைவாக ஸ்வீடன் நாட்டின் மைய வங்கியான Sveriges Riksbank, பொருளியல்அறிவியல் (economic sciences) துறைக்கான நோபல்பரிசு ஒன்றை நிறுவியது. ‘பொருளியலுக்கு “அறிவியல்” சாயத்தைப் பூசி, அது அரசியலுக்கு அப்பாற்பட்டது எனும் போர்வையில், சந்தைப் பொருளாதாரக் கருத்தியல் நிறுவன மயமாக்கப்பட்டது’ என்று The Nobel Factor: The Prize In Economics, Social Democracy And The Market Turn எனும் புத்தகம் நமக்கு அதன் வரலாற்றைக் கூறுகிறது.

சந்தைப் பொருளாதாரம் எனும் அமைப்பை நியாயப்படுத்தும் பங்களிப்புகளுக்கே இந்தப் பரிசு வழங்கப்படுகிறது எனும் குற்றச்சாட்டின் பின்னணி நம் புரிதலுக்கான தொடக்கப்புள்ளி.

**மானுடத்தின் முன்னேற்றத்துக்கு இவர்களின் பங்களிப்பு என்ன?**

“இந்த ஆண்டு பொருளியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் ஆய்வுகள், உலகில் ஏழ்மையை எதிர்த்துப் போராடுவதற்கான நம்முடைய திறனை பெருமளவுக்கு அதிகரித்திருக்கின்றன. அவர்களுடைய ‘சோதனை அடிப்படையிலான அணுகுமுறை’ (experiment based approach), மேம்பாட்டுப் பொருளியலைப் பெரிதும் மாற்றியமைத்திருக்கிறது. அந்த அணுகுமுறை இன்று மிகப் பிரபலமான ஒன்றாகப் பல ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகிறது. அவர்களுடைய சோதனை அடிப்படையிலான ஆய்வு செய்முறைகள் (research methods) இன்று மேம்பாட்டுப் பொருளியலில் முழுமையாக மேலாதிக்கம் செலுத்துகின்றன” என்று நோபல் பரிசு வழங்கும் குழு தன்னுடைய குறிப்பில் கூறியுள்ளது.

உலகின் பல நாடுகளில் வறுமைக் குறைப்பு முயற்சிகள் பல காலமாக எடுக்கப்பட்டு வந்துள்ளன. அந்நாடுகளின் அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் எனப் பலரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் இடையீடுகள் வழியே வறுமையைக் குறைக்கக் கோடிக்கணக்கில் செலவு செய்து வந்தனர். ஆனால், ‘வறுமையின் உண்மைக் காரணங்கள், அதன் பன்முகத்தன்மை போன்றவற்றின் புரிதலோடுதான் இந்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா? அப்படி எடுக்கப்படும் முயற்சிகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அளவிடும் மதிப்பீடுகள் (impact evaluation) ஏதும் உண்டா?’ போன்ற கேள்விகளை எழுப்பி, வறுமையைப் புரிந்துகொள்ளவும் அதன்மீது நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் குறிப்பிட்ட இடையீடுகளை (specific interventions) வடிவமைக்கவும் 90களின் இறுதியில் களமிறங்கியவர்கள்தான் இந்த ஆண்டு பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்ற மூவரும்.

**வறுமை நோய்க்கு ஆய்வு மருந்து**

இவர்கள் அறிமுகப்படுத்திய ஆய்வுமுறையின் பெயர் Randomized Control Trials (RCT). இது மருத்துவத் துறையில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆய்வுமுறையாக இருந்தாலும், சமூக அறிவியலுக்குப் புதிதுதான். அதாவது, ஒரு புதிய மருந்து எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்கு இந்த ஆய்வுமுறையைப் பயன்படுத்துவார்கள்: உடல் மற்றும் ஆரோக்கியம் ரீதியாகச் சராசரியாக ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்ட சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிப்பார்கள். ஒரு குழுவினருக்கு மட்டும் புதிய மருந்து (treatment) வழங்கப்படும்; மற்றொரு குழுவினருக்கு அந்த மருந்து வழங்கப்படாது. இவ்விரு குழுவினரையும் அந்த மருந்தின் தாக்கம் தெரியும்வரை கண்காணிப்பில் வைப்பார்கள்.

ஒரே மாதிரியான பண்புகளை வெளிப்படுத்தும் இவ்விரு குழுவினரில், மருந்து வழங்கப்பட்ட குழுவினரின் உடல், ஆரோக்கியம் சார்ந்த பண்புகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதற்குக் காரணம் கொடுக்கப்பட்ட அந்த மருந்துதான். அம்மருந்து எதிர்பார்த்த விளைவுகளைத் தந்துள்ளதா இல்லையா என்பதன் அடிப்படையில் அதனைப் பயன்படுத்தலாமா இல்லையா எனும் முடிவு எடுக்கப்படும்.

இந்த ஆய்வு முறையை வறுமைக்குறைப்பு தொடர்பாக மேம்பாட்டுப்பொருளியல் துறையில் நடத்தப்படும் ஆய்வுகளில் பயன்படுத்தினால், எந்தெந்த இடையீடுகள் வறுமையின் மீது நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று அவற்றை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தி, தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்; இதுபோன்ற சோதனைகளின் மூலம் கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு வறுமைக் குறைப்புக்கான சரியான கொள்கைகளை அரசுகள் வடிவமைக்க முடியும் (evidence-based policy making) எனும் பார்வையும் நம்பிக்கையும் ஒருசேரப் பிறந்தன. இந்த சோதனை அடிப்படையிலான ஆய்வு முறையின் முன்னோடிகள் பானர்ஜி, டுஃப்ளோ மற்றும் மைக்கேல் கிரேமர் என்று பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அமெரிக்காவில் நிறுவிய The Abdul Latif Jameel Poverty Action Lab (J-PAL) என்னும் ஆய்வுக்கூடம் இன்று உலகில் 83 நாடுகளில் 900க்கும் மேற்பட்ட RCT சோதனைகளை மேற்கொண்டு, எந்தெந்த இடையீடுகள் வறுமைக் குறைப்புக்கு உதவுகின்றன என்பதை அடையாளம் கண்டுள்ளன; அவற்றின் விளைவாகப் பல அரசுகளின் வறுமைக் குறைப்புக் கொள்கைகள் எந்த திசையில் எதை நோக்கிப் பயணிக்க வேண்டும் எனும் தெளிவைப் பெற்றுள்ளன என்று நம்பப்படுகிறது. இவர்கள் எதுபோன்ற சோதனைகளை மேற்கொள்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

**இடையீடுகளின் தன்மை**

நாட்டில் அனைத்துப் பிள்ளைகளும் ஆரம்பக்கல்வி பெற வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட அந்த வயதுப் பிள்ளைகள் அனைவரையும் பள்ளிக்குக் கொண்டுவந்து சேர்த்துவிட்டோம். ஆனால், அவர்கள் பெறும் கல்வியின் தரம் மிகவும் மோசமாக இருந்தால் அவர்களுடைய கற்றல் விளைவுகள் (learning outcomes) சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. ஆனால், நாட்டின் பல பகுதிகளில் அதுதான் கள யதார்த்தமாக இருக்கிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு இரண்டாம் வகுப்புப் பாடத்தைப் படிப்பதில், கூட்டல் கழித்தல் போன்ற அடிப்படையான கணிதம் செய்வதிலும் சிரமம் இருப்பது Pratham எனும் நிறுவனம் ஆய்வுகள் நடத்தி வெளியிடும் Annual State of Education Report (ASER) அறிக்கைகள் வழியே நாம் தெரிந்துகொள்ளலாம்.

**பள்ளிப் பிள்ளைகளை பாதிக்கும் காரணிகள்**

இந்தச் சிரமம் ஆரம்பக்கல்வி பெறும் அனைத்து நிலையிலும் உள்ள மாணவர்களுக்கும் பொருந்தும். அடிப்படைத் திறன் பெறுவதிலேயே பிள்ளைகளுக்கு இவ்வளவு சிரமம் இருந்தால் உயர்நிலைத் திறன்களை எவ்வாறு பெறுவது? வறுமையிலிருந்து வெளியே வர உதவும் நல்ல வேலையில் எப்படி அமர்வது?

பிள்ளைகள் சரியாகப் படிக்காமல் இருப்பதற்குப் பல காரணிகள் உள்ளன. பெற்றோரின் கல்வித்தகுதி, குடும்ப வருமானம், சத்துள்ள உணவு மற்றும் சுத்தமான குடிநீர், வீட்டில் மின்சார வசதி, வீட்டுக்கும் பள்ளிக்கும் உள்ள தொலைவு, பெண் பிள்ளை என்றால் கூடுதலாகப் பாதுகாப்பு சார்ந்த காரணிகள், பள்ளியில் வழங்கப்படும் கல்வியின் தரம், ஆசிரியர்களின் திறன், பாடம் சொல்லிக்கொடுக்க அவர்கள் செலவு செய்யும் நேரம், எத்தனை நாட்கள் பள்ளிக்கு ஆசிரியர்கள் வராமல் இருக்கிறார்கள் எனக் காரணிகளை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.

‘அரசிடம் உள்ள நிதி ஆதாரங்கள், அரசின் செயல்திறன் இவையிரண்டும் குறைவாக இருக்கையில் இந்த அனைத்துக் காரணிகளின் மீதும் நேரடியாக நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையை, ஒரு கொள்கையை அரசு வடிவமைப்பது சாத்தியமற்ற ஒன்று. எந்த காரணியைத் தாக்கினால் பிள்ளைகளின் கற்றல் விளைவுகளில் நல்ல முன்னேற்றத்தைக் காணமுடியும் என்று அடையாளம் காண வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு சோதனைகளை நடத்தி, அந்த சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட இடையீடு வேலை செய்கிறதா இல்லையா, அதை அரசு தேசிய அளவில் கொள்கையாக மாற்ற முடியுமா இல்லையா போன்ற முடிவுகளை ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கலாம்’ என்பதே இந்த RCT ஆய்வுமுறையைப் பயன்படுத்துபவர்களின் வாதமாக இருக்கிறது.

**வறுமைக் குறைப்புக் கொள்கைக்கு அடிப்படை**

ஒரு கிராமத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதைக் குறைக்க ஒரு குறிப்பிட்ட இடையீடு மேற்கொள்ளப்படும்; அதன் விளைவாக மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்ணில் முன்னேற்றம் இருக்கிறதா என்று மேற்கொள்ளப்பட்ட இடையீட்டுக்கும் விளைவுகளுக்கும் உள்ள தொடர்பு அளவிடப்படும். மற்றொரு கிராமத்தில், அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குச் சிறு நிதியுதவி வழங்கி தனியார் பள்ளிக்கு அனுப்புவதால் அவர்களின் கற்றல் விளைவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுகிறதா என்று கண்காணிக்கப்பட்டு அதன் முடிவுகள் மதிப்பீடு செய்யப்படும். மற்றொரு பகுதியில், மதிய உணவுக்கு முன் குடல்புழு நீக்கம் செய்யும் மாத்திரை (deworming tablet) வழங்கப்படுவதால் மாணவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு அது அவர்களின் தேர்வு மதிப்பெண்ணில் பிரதிபலிக்கிறதா எனும் சோதனை நடத்தப்படும்.

இவ்வாறு கல்வி, ஊட்டச்சத்து, சுகாதாரம், சிறு கடன் (microcredit), உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளால் ஏற்படும் மாற்றங்கள் என இந்தியா உட்பட பல நாடுகளில் பல சோதனைகளை நடத்தி, அவற்றில் எந்தெந்த இடையீடுகள் மிகச் சிறந்த தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதைக் கண்டறிந்து, அரசுகளுக்கு வறுமைக் குறைப்புக் கொள்கைகளை வடிவமைக்க உதவி, ஏழை மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இவர்கள் தங்களுடைய அனுபவங்களை, Poor Economics: A Radical Rethinking of the Way to Fight Global Poverty எனும் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், இந்த ஆய்வுமுறை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதை இக்கட்டுரையின் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

**(அடுத்த பாகம் நாளை காலை 7 மணிக்கு)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share