2019ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக இப்பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த உயரிய பரிசுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகின்றன.
2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று (அக்டோபர் 7) துவங்கின. முதலில் மருத்துவத்திற்கான பரிசு அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நோபல் கமிட்டியின் செயலாளர் தாமஸ் பெர்ல்மேன், “அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வில்லியம் ஜி.கேலின், ஜார்ஜ் செமென்ஸா, இங்கிலாந்தைச் சேர்ந்த சர் பீட்டர் ரெட் கிளிப் ஆகிய மூவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
செல்களின் வளர்சிதை மாற்றத்திற்கும், ஆக்ஸிஜன் அளவுக்குமான தொடர்பை கண்டறிந்ததற்காகவும், ஆக்ஸிஜன் அளவை செல்கள் உணர்ந்து தகவமைத்துகொள்வது எவ்வாறு என கண்டறிந்ததற்காகவும் மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்கள் ஆக்ஸிஜனை எவ்வாறு உணரும் என்ற இவர்களின் ஆய்வு அனீமியா, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களின் சிகிச்சைக்கு மிகவும் உதவியாக இருக்கும். நோபல் பரிசுக்காக வழங்கப்படும் தொகையான 9,18,000 அமெரிக்க டாலர்கள் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
இதுபோலவே இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசுகள் நாளையும் நாளை மறுநாளும் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு இலக்கியத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்படாததால் இந்த ஆண்டு இலக்கியத்திற்கு இரண்டு நோபல் பரிசுகள் வரும் 10ஆம் தேதி வழங்கப்படவுள்ளன. அமைதிக்காக நோபல் பரிசு 11ஆம் தேதியும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 14ஆம் தேதியும் வழங்கப்படுகிறது.�,