சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது: பொதுப்பணித் துறை!

public

சென்னை குடிநீர் ஏரிகளில் 72 சதவிகிதம் தண்ணீர் இருப்பு உள்ளதால் இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க முடியும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த ஐந்து ஏரிகளிலும் மொத்தம் 11.757 டிஎம்சி தண்ணீர் சேர்த்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் 8.640 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இது ஏரிகள் மொத்த கொள்ளளவில் 72 சதவிகிதமாகும்.
தற்போது கோடைக்காலம் தொடங்கியிருந்தாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வழக்கத்தைவிட கூடுதலாக தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சராசரியாக ஒரு மாதத்துக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.
தற்போது ஏரிகளில் 8.640 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளதால் இன்னும் எட்டு மாதங்களுக்குத் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய முடியும். மேலும், அடுத்த மாதம் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி, கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்குத் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எனவே, தற்போது ஏரிகளில் உள்ள தண்ணீரை வைத்து இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க முடியும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டிஎம்சி ஆகும். இதில் 1.874 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் 2.890 டிஎம்சி தண்ணீர், சோழவரம் ஏரியில் 341 டிஎம்சி தண்ணீர், செம்பரம்பாக்கம் ஏரியில் 2.583 டிஎம்சி தண்ணீர், கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

**-ராஜ்-**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.