மாநிலம் முழுவதும் ஜூலை 31ஆம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கில் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. தமிழகம் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மண்டலங்களுக்குள்ளான பேருந்து சேவைக்கு அனுமதிக்கப்பட்டது.
ஆனால், கொரோனா தொற்று வேகமாகப் பரவியதால் ஜூன் 30 வரை மாவட்டங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், மாவட்டங்களுக்குள்ளான பேருந்து போக்குவரத்தும் ஜூலை 1 முதல் 15ஆம் தேதி வரை ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசு இன்று (ஜூலை 13) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
தற்போது, தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்குடன் 31.7.2020 வரை தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது. தமிழக அரசின் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**எழில்**
�,