செய்தியாளர் சந்திப்புகள் வேண்டாம்: அரசுக்கு பிரஸ் கிளப் கோரிக்கை

public

கொரோனா தொற்றுக்கு எதிராக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் போலவே பத்திரிகையாளர்களும் களத்தில் தங்கள் கடமையை செய்து வருகின்றனர். இதன் விளைவாக பத்திரிகை நிருபர்களுக்கும், கேமரா மேன்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் முக்கியப் பத்திரிகை, ஊடகங்களில் பணிபுரியும் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை ஒட்டி இன்று ஏப்ரல் 20 ஆம் தேதி காலை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பத்திரிகையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியும் முழுமையான பரிசோதனை நடைபெறுகிறது. முதற்கட்டமாக 50 பேருக்கு மட்டுமே இன்றைக்கு பரிசோதனை என்ற சூழலில் , காய்ச்சல்,சளி , இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நேற்றே வட சென்னை பாரதி கல்லூரியில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில் சென்னை பிரஸ் கிளப் இணைச் செயலாளர் பாரதி தமிழன் விடுத்துள்ள செய்தியில், “கொரோனா நோய்த்தொற்று ஆபத்து பரவ ஆரம்பித்த நாளிலிருந்து நோய்த்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பட்டியலில் பத்திரிகையாளர்கள் இடம் பெற்றுள்ளோம். ஏப்ரல் 19 ஆம் தேதி தலைநகர் சென்னையில் பத்திரிகை சகோதரர்கள் சிலருக்கு முதற்கட்டப் பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இந்தச் செய்திகள் கவலை அளிக்கின்றன. மிக சமீபத்தில் யுனிசெஃப் நிறுவனத்துடன் இணைந்து கோவிட்-19 என்கிற கொரோனாவை நாம் எதிர்கொள்வதில் கையாள வேண்டிய நடைமுறைகளை வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளான பத்திரிகையாளர்கள் விரைவில் நலம் பெற உரிய சிகிச்சைகள் வழங்கிட அரசை வலியுறுத்துவோம்.

பாதிக்கப்பட்ட நமது பத்திரிகை சகோதரர்களுடன் தொடர்புடைய அனைவரும் தாமாக முன்வந்து உடனடியாகப் பரிசோதனை செய்து கொள்வோம். மேலும் கொரோனா காலகட்டத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியும் சிறப்புப் பரிசோதனை முகாமை நடத்த சென்னை பத்திரிகையாளர் மன்றம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேலும் முக்கியமாக அரசும் ,அரசியல்வாதிகளும் நேரடி செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்க்க வேண்டும். அப்படி அவர்கள் தவிர்க்கத் தவறினால் பத்திரிகையாளர் பாதுகாப்பு கருதி ஊடக நிறுவனங்கள் உறுதியான முடிவெடுக்க சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சென்னையைப் போலவே மும்பையிலும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 21 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *