`மாமல்லபுரம் பேருந்துகளுக்குத் தடை!

Published On:

| By Balaji

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் வரும் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்காக மாமல்லபுரம் முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் மாமல்லபுரம் நகரத்துக்குள் இன்று (அக்டோபர் 9) முதல் 4 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாமல்லபுரம் நகரத்திற்குள் இருந்த பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையில் பூஞ்சேரி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பேருந்துகளும் பூஞ்சேரியில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்படுகிறார்கள். இன்று காலை முதல் அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் மாமல்லபுரம் நகரத்திற்குச் செல்ல கிழக்கு கடற்கரைச் சாலை மாமல்லபுரம் நுழைவாயிலிருந்து நடைப் பயணமாகச் செல்கின்றனர்.

அரசு பேருந்துகளைப் போன்று தனியார் பேருந்துகள், கார்கள், ஷேர் ஆட்டோக்கள் ஆகியவை மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே இரு நாட்டுத் தலைவர்களின் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. அப்பகுதி பள்ளியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா மற்றும் சீன கொடிகளுடன் பேரணி சென்றனர். பேரூராட்சி அலுவலகம் தொடங்கி, பேருந்து நிலையம், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை வழியாகச் சென்ற பேரணி மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தைச் சென்றடைந்தது. இப்பேரணியை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share