அரசு பள்ளிகளில் புத்தகம் இல்லா தினம் கொண்டாட உத்தரவு!

Published On:

| By admin

தமிழகம் முழுவதும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26ஆம் தேதி புத்தகம் இல்லாத தினம் கொண்டாட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி புரியும் பள்ளியில் பயிலும் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் இல்லா தினம் கொண்டாட வேண்டும் என்று மத்திய திட்ட ஏற்பளிப்புக் குழு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, அந்த நாளில் பள்ளிகளுக்கு புத்தகங்கள் எடுத்துச் செல்வதை விடுத்து, மாணவர்கள் அனுபவங்கள் மூலம் வாழ்க்கைக் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் பரிசுப்பொருள் வழங்க மாணவர் ஒருவருக்கு ரூபாய் 10 வீதம் 1263550 மாணவர்களுக்கு மொத்தம் ரூ .126.355 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்குவதும் , மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான உடல் நலம் மற்றும் மனவளத்தினை மேம்படுத்துவதும் ஆகும் . மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை முழு சுதந்திரத்துடன் வெளிப்படுத்தவும் , மன அழுத்தமில்லாத சூழ்நிலையில் அனுபவங்களின் மூலம் கற்றுக் கொள்வதற்கும் , உடல் , மனம் மற்றும் அறிவுசார் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பாகவும் இது அமையும் . அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தகங்களை எடுத்துச் செல்லும் சுமையை குறைத்து , வாழ்க்கைக்கான கல்வியை அனுபவங்களின் மூலம் மாணவர்கள் பெற்றிடும் வகையிலான செயல்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.

இந்த நாளில் மாடி தோட்டம், மூலிகை தாவர வளர்ப்பு, பாரம்பரிய கலைகள் குறித்தும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share