உண்மை தெரியாமல் என்னைக் கண்டித்து இஸ்லாமிய தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்று ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு வீடு எடுத்து தங்கி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இந்த நிலையில் ரேஷன் கடை அமைப்பது தொடர்பாக கோரிக்கை மனு அளிக்க, அமைச்சர் தங்கியிருந்த வீட்டுக்கு கேசவனேரி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சென்றனர். ஆனால், அமைச்சரோ, இஸ்லாமியர்கள் மனம் புண்படும்படி பேசி திருப்பி அனுப்பியிருக்கிறார்.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், இஸ்லாமிய இயக்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் மதுரை உள்ளிட்ட இடங்களில் போராட்டமும் நடத்தின. மதுரையில் எஸ்டிபிஐ நடத்திய போராட்டத்தின்போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவப்படம் இருந்த பேனரை செருப்பால் அடித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
**அமைச்சர் விளக்கம்**
இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.தூத்துக்குடியில் இன்று (அக்டோபர் 18) செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, “நேற்று முன்தினம் இரவு நான் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியே கிளம்பிக்கொண்டிருந்தேன். அப்போது, அங்கு வந்த 3 பேர் ரேஷன் கடையை ஒதுக்கித் தர வேண்டும் எனக் கேட்டனர். இதுதொடர்பாக தாசில்தாரிடம் மனு கொடுங்கள். அதன் பிரதியை என்னிடம் கொடுங்கள் என்று நான் கூறினேன். ஆனால் அவர்களோ, ரேஷன் கடையை ஒதுக்க முடியுமா என இப்போதே கூறுங்கள் என்றனர். அவர்களது பேச்சு சரியில்லாத காரணத்தால் காலையில் வாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்” என்று விளக்கம் அளித்தார்.
சிறுபான்மை மற்றும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எதிராக நான் பேசியதாக பொய்யான ஒரு தகவலை பரப்பி வருகிறார்கள் என்று குற்றம்சாட்டிய ராஜேந்திர பாலாஜி, “இந்தத் தகவல் உண்மையா அல்லது பொய்யா, என்னுடைய குரல் அதில் உள்ளதா என்பதெல்லாம் தெரியாமல் காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி ஆகியோர் என்னை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்” எனக் குற்றம்சாட்டினார்.
**தவறான தகவல் பரப்பப்படுகிறது**
மேலும், “சிறுபான்மை சமுதாய மக்களின் வாக்கு அதிமுகவுக்கு திரும்பியுள்ள நிலையில், இவர்கள் இவ்வாறு பேசுவது அந்த வாக்குகளை திமுகவுக்கு திருப்புவதற்கான வழிமுறை. நானும் ஒரு சிறுபான்மையின சமுதாயத்தினை சார்ந்தவன் தான். பெரும்பான்மை சமுதாயத்தை மதிக்கக் கூடியவன். சிறுபான்மை சமுதாயத்தை நேசிக்கக்கூடியவன். சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசியதாக உண்மைக்கு புறம்பான தகவல் பரப்பப்பட்டிருக்கிறது” என்றும் தனது பேட்டியில் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டார்.�,”