மனிதக்கழிவுகளை அகற்றும் பணிகளில் மனிதர்களே ஈடுபடுத்தப்படுவது தடை செய்யப்பட்ட குற்றம் என்று குறிப்பிட்ட நடிகர் கமல்ஹாசன், ‘அறிவியல் சாதனைகளில் உச்சம் தொட்டாலும் அன்பின் இயல் வளரா சமூகமாக நாம் தேங்கி விடக்கூடாது. ’ என்று கூறியுள்ளார்.
நமது சமூகத்தில் நீண்ட காலமாக நடந்துவரும் கொடுமைகளுள் ஒன்று மனிதக்கழிவுகளை மனிதரே அகற்றும் அவலம். பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் சிலரின் மரண செய்தியை நாம் தொடர்ந்து கேட்க நேரிடுகிறது. உள்ளங்கைக்குள் உலகத்தைக் கொண்டு வரும் அளவுக்கு அறிவியல் வளர்ந்தும் கூட இத்தகைய கொடுமைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. நேற்று(ஜூலை 16) கூட சென்னையில் பாதாள சாக்கடைக் குழிக்குள், இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த துக்க சம்பவம் நிகழ்ந்தது.
இந்தக் கொடுமைகளை எல்லாம் கண்டும் அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து அமைதி காப்பது குற்றமாகும். என்று கூறி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (ஜூலை 17) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Makkal Needhi Maiam Party President Mr @ikamalhaasan’s Press Release On Manual Scavenging#PressRelease #MakkalNeedhiMaiam pic.twitter.com/6GqsZtCENc
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) July 17, 2020
அதில், “நேற்று (ஜூலை 16) சென்னையில் பாதாள சாக்கடைக் குழிக்குள், இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் மீண்டும் மீண்டும் மனித உயிர்கள் அலட்சியப்படுத்தப்படுவதை அழுத்தம் திருத்தமாக காண்பிக்கிறது. கடந்த ஜூலை 2-ம் தேதி தூத்துக்குடியில் நான்கு தொழிலாளர்கள், நேற்று சென்னையில் இருவர் என துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை 1993 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டதுடன், 2013-இல் இத்தடை, சட்டமாக இயற்றப்பட்டு பல திருத்தங்களுடன் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
2014-இல் உச்ச நீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளும் இச்சட்டத்தை பின்பற்றி சாக்கடை அள்ளும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதை தடை செய்வதுடன், அப்பணியில் இருக்கும் தொழிலாளர்களின் வாழ்வை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனாலும் தமிழகத்தில் 1993-ல் இருந்து 2019 வரை 206 தொழிலாளர்கள் பாதாள சாக்கடை அள்ளும் பணியில் உயிரிழந்துள்ளனர். நம் மாநில அரசுகள் அத்தொழிலாளர்களின் உயிரையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் எத்தனை அலட்சியப்படுத்தியுள்ளது என்பது புலப்படும் உண்மை.
சட்டத்தால் தடை செய்யப்பட்ட செயல், நம் மாநிலத்தில் மீண்டும் மீண்டும் நடக்கிறதென்றால் நம் சட்டம் ஒழுங்கின் நிலை என்ன என்கின்ற கேள்வி எழாமல் இல்லை. மனித உயிர்களுக்கு எதிரான அனைத்து அநீதிகளையும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது போல, அரசு இதையும் வேடிக்கை பார்த்து அமைதி காப்பது குற்றமாகும். அறிவியல் சாதனைகளில் உச்சம் தொட்டாலும் அன்பின் இயல் வளரா சமூகமாக நாம் தேங்கி விடக்கூடாது. மனிதக்கழிவுகளை மனிதன் அகற்றுவது தடை செய்யப்பட்ட குற்றம். சக மனிதனை அக்கொடுமைக்கு உள்ளாக்கும் குற்றத்தை பிறரை செய்ய விடாமல் தடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”