கைலாசாவில் உணவகம் அமைக்க அனுமதி கேட்டு நித்யானந்தாவுக்குக் கடிதம் எழுதிய மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை சாமியாரான நித்யானந்தா விநாயகர் சதுர்த்தி அன்று, கைலாசா நாட்டுக்கான பொற்காசுகளை வெளியிட்டார். தொடர்ந்து 56 இந்து நாடுகளோடு மட்டும் பொருளாதார ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகவும், கைலாசாவில் தொழில் தொடங்க காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டில் ஹோட்டல் வைக்க அனுமதி கேட்டு மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டல் நிறுவனர் குமார், நித்யானந்தாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், தாங்கள் சொன்னபடியே கைலாசம் என்ற தனிநாடு ஆரம்பித்ததோடு அல்லாமல் தனியாக பொற்காசு நாணயங்களையும் வெளியிட்டிருக்கிறீர்கள். தங்களது தனி திறமையைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. கைலாசா நாட்டில் டெம்பிள் சிட்டி ஹோட்டல் திறப்பதற்குத் தங்களது அனுமதியை வேண்டி காத்திருக்கிறேன். இது, உலகிலேயே மிகச் சிறந்த உணவை வழங்கி கைலாசா நாட்டை மேலும் பலப்படுத்த உதவும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் மக்களை ஈர்க்க புதிய யுத்திகளைக் கையாள்கிறீர்கள். அது போல, நாங்களும் மாஸ்க் பரோட்டா, கொரோனா தோசை என்று பல யுத்திகளைக் கையாண்டு வருகிறோம். தங்கள் பதிலுக்குக் காத்திருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் வெளியான சில மணி நேரங்களிலேயே நேரலையில் தோன்றிய நித்யானந்தா, டெம்பிள் சிட்டி குமார் கைலாசாவில் ஹோட்டல் தொடங்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதற்குப் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாக குமார் மீது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் அளித்த புகாரில், அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளிக்கு ஆதரவு தரும் வகையிலும், நித்யானந்தாவை நல்லவர் போலக் காட்டும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் கூறி குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
**-கவிபிரியா**�,”