Gஇங்கே பெயில்… அங்கே வசூல்!

Published On:

| By Balaji

நித்தி தனக்கென செய்தித் தொடர்பாளர்கள் யாரும் வைத்திருக்காதது பற்றி அவரே தெரிவித்திருக்கிறார். நித்தியைச் சுற்றி நடக்கும் அதிகாரமோதல்கள்தான் அதற்குக் காரணம். இது ஒரு பக்கம் இருக்க, நித்தியின் இரு பெண் மேனேஜர்கள் குஜராத் சிறையில் இருக்கும் நிலையில் நித்தியின் அடுத்த கட்ட வசூல் வேட்டை ஆரம்பித்துவிட்டது.

நித்யானந்தாவின் செயலாளராக இருந்த ஜனார்த்தன சர்மா தன் குழந்தைகளை அகமதாபாத் ஆசிரமத்தில் நித்தி அடைத்து வைத்துள்ளதாக கொடுத்த புகாரின் அடிப்படிடையில் நித்தியை ஏ1 ஆகவும், அவரது ஆசிரம மேலாளர்கள் மீதும் வழக்கு போட்டது குஜராத் போலீஸ். இந்த வழக்கில் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி நித்தி ஆசிரம மேனேஜர்களான பெண்கள் மா பிரன் பிரியா, மா பிரிய தத்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட இரு மேலாளர்களும் இந்திய தண்டனைச் சட்டம் 365, 344, 323, 504 மற்றும் 506 (2) ஆகியவற்றின் கீழ் குழந்தைத் தொழிலாளர் தடை பிரிவோடு முறையே கடத்தல், கட்டுப்படுத்துதல், காயப்படுத்துதல், வேண்டுமென்றே அவமதித்தல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகியவற்றுக்காக கைது செய்யப்பட்டனர்.

இந்த பெண் மேலாளர்களின் பெயில் மனுக்களை கீழ் நீதிமன்றங்கள் நிராகரித்துவிட்ட நிலையில், குஜராத் உயர் நீதிமன்றத்தில் இருவரும் டிசம்பர் 23 ஆம் தேதி தங்களை பெயிலில் விடுமாறு மனு செய்திருக்கிறார்கள். இந்த மனு வரும் ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தன் செயலாளராக இருந்தவர் தன் மீது புகார் கொடுத்திருக்கிறார், தன் ஆசிரமத்தின் மேலாளர்களாக இருந்த தன்னுடைய பக்த பெண்கள் சிறையில் இருக்கிறார்கள். தன் மீதான பாலியல் வழக்கு விசாரணையே இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நித்தி யு ட்யூப் சத் சங்கத்தில் தன் பிறந்தநாளுக்காக வசூல் வேட்டை நடத்த ஆரம்பித்துவிட்டார்.

அவரது லேட்டஸ்ட் வீடியோவில், “என்னுடைய பிறந்தநாள், நட்சத்திரம் விரைவில் வருகிறது. அதற்காக நான் உங்கள் எல்லாருக்கும் ஒரு சலுகை அளிக்கப் போகிறேன். ஆஃபர் அளிக்கிறேன். அதாவது பாத பூஜை செய்ய இதுவரை சஜஸ்டடு டொனேஷன் என்று இருந்தது. அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் என் பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு பாத பூஜை செய்ய எவ்வித சஜஸ்டடு டொனேஷனும் வசூலிக்கப்போவதில்லை. யார் வேண்டுமானாலும் பாத பூஜை செய்யலாம். உங்களுடைய பெயர், குடும்பத்தினர் பெயர் எழுதி எனக்கு மெயில் அனுப்புங்கள். இந்த முறை என் அவதார தினத்தை முன்னிட்டு உலகத்தில் உள்ள அனைவரும் எனக்கு பாத பூஜை செய்யலாம்.

ஆனால் ஒன்று… பாத பூஜை செய்யும்போது குருவுக்கு தட்சணை கொடுத்தே ஆக வேண்டும். அது ஒரு ரூபாயாக இருக்கலாம், ஒரு பைசாவாக இருக்கலாம், ஒரு சென்ட் ஆக இருக்கலாம். உங்களுக்கு என்று இதுதான் கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. ஆனால் குருதட்சணை கொடுக்க வேண்டும் என்பதே விதி. எனவே என் அவதார தினத்தில் அனைவரும் பாத பூஜை செய்யுங்கள். என் ஆசீர்வாதங்கள் அனைவருக்கும் உண்டு” என்றதோடு நித்தி இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டார்.

“கைலாசாவுக்கு நீங்கள் வரமுடியாவிட்டால் பரவாயில்லை. இ கைலாசவாசி ஆகலாம். அதற்கும் எனக்கு விண்ணப்பியுங்கள்”.

கைலாசா எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. கர்நாடகா, குஜராத் என இரு இந்திய மாநிலங்கள் தேடிக் கொண்டிருக்கும் ஒரு ஆள், இந்திய வெளியுறவுத்துறை கிரீன் கார்னர் நோட்டீஸ் கொடுத்திருக்கும் ஆள் இ -கைலாஷ்வாசியாகலாம் என்று அழைப்பு விடுகிறார். தன் பிறந்தநாள் வசூல் நடத்துகிறார்…

(நித்தியின் சர்ச்சைகள் நீளும்)

[நித்தியின் இருமொழிக் கொள்கை!](https://minnambalam.com/k/2019/12/23/43)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share