மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று லைவில் சத்சங்கம் நடத்திய நித்யானந்தா, “திடீர்னு கண்ணு முழிச்சு பாத்தா உலகமே மாறியிருக்கு” என்று வழக்கமான தனது பாணியில் கலகலப்புடன் கூறினார்.
பாலியல் வழக்கு, கொள்ளை, சிறுமிகள் கடத்தல் என நித்தியானந்தா மீது பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் உள்ளது. பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள நித்தியானந்தா தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்வதாக அறிவித்தார். அந்த கைலாசாவும் இதுவரை எங்கிருக்கிறது என்ற விவரம் உறுதியாகத் தெரியவரவில்லை. ஆனால் தினசரி லைவ் வர மட்டும் நித்தியானந்தா தவறியதில்லை.
அதில் அவர் பேசும் பேச்சுகள் வைரலாவதோடு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மீம் போட பஞ்சமில்லாமல் இருந்தது. இந்நிலையில்தான் 3 மாதங்களுக்கு முன்பு திடீரென நித்தியானந்தாவிடம் இருந்து எந்த லைவும் வரவில்லை. இதனால் அவர் உயிரிழந்துவிட்டார், கோமா நிலையில் இருக்கிறார் என்றெல்லாம் தகவல் பரவியது. இதற்கு கைலாசா முகநூல் பக்கத்தில், நித்தியானந்தா சமாதி நிலையில் இருக்கிறார். உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அப்டேட் தொடர்ந்து கொடுக்கப்பட்டது. கடந்த ஜூன் 14ஆம் தேதி நித்தியானந்தாவால் சரளமாகப் பேச முடிகிறது, அவர் விரைவில் சத்சங்கம் நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
நித்தியானந்தாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்காகக் கோடிக்கணக்கில் செலவான நிலையில், மீண்டும் தியான வகுப்பு நடத்த இருப்பதாகவும் இந்திய மதிப்பில் 8 லட்சம் ரூபாய் முதல் 16 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு நித்தியானந்தா நேற்று இரவு கைலாசா யூடியூப் தளம் மூலம் லைவ் வந்தார். நேற்று இரவு 8.30 மணியிலிருந்து 11.40 வரை லைவில் இருந்தார்.
முதலில் தலையில் கிரீடம், மார்பில் தங்க ஆபரணங்களை அணிந்து தோன்றினார். சிறிது நேரத்திலேயே அந்த கிரீடம் மற்றும் நகைகள் எதுவும் இல்லை. வேறு சில சிறிய நகைகளை மட்டும் அணிந்திருந்தார். குருபூர்ணிமா சத்சங்கத்தில் பேசிய நித்தியானந்தா, உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது அக்கறையுடன் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதற்காகவே லைவ் வந்ததாகக் கூறினார்.
சத்சங்கம் பற்றியும், சமாதி நிலை பற்றியும் பேசிய அவர், “பரமசிவனின் ஆசீர்வாதம் உங்களுக்கு எல்லாம் கிடைக்கட்டும். நீண்ட சமாதி நிலையில் இருந்து வந்துள்ளேன். புதிதாக வந்துள்ளேன். நான் உட்பட இந்த கைலாசா முழுவதும் புதிதாக அப்கிரேட் ஆகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு என் குருவிடம் பாலசன்யாசியாக இருந்தேன். தற்போது புதிய துவக்கத்தைத் தொடங்குகிறேன்” என்று ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தவர் இன்னும் சில நிமிடங்களில் தமிழில் பேசுவதாக அறிவித்தார்.
தமிழில் பேசும் போது வேறு ஒரு தலைப்பாகையை அணிந்திருந்த நித்யானந்தா, “நீண்ட கால சமாதி நிலைக்குப் பின் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது. இன்று முதல் நாள் சத்சங்கம். இந்த போராட்டத்தால் வார்த்தை வெளிவராமல் அமைதியாக இருக்கிறேன். கைலாசத்துக்குத் துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. ஏப்ரல் 13ஆம் தேதி முதல் ஜூலை 13 ஆம் தேதி வரை நிறைய நடந்திருக்கிறது. உங்களுக்கு மூன்று மாதம், எனக்கு அது ஒரு யுகம். என் உடல், மூளை அனைத்தும் மாறி இருக்கிறது” என்றார்.
இறுதியாக, “திடீர்னு கண்ணு முழிச்சு பாத்தா உலகமே மாறியிருக்கு, என்னாய்யா பண்ணி வச்சிருக்கீங்க” என சிரித்துக்கொண்டே பேசிய நித்யானந்தா சொல்வதற்கு நிறைய இருக்கிறது, மீண்டும் பேசுகிறேன் எனச் சத்சங்கத்தை நிறைவு செய்தார்.
-பிரியா