மதுரை தேவாங்கர் கலை கல்லூரியில் கணிதத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்த நிர்மலா தேவி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள அவர் இதுதொடர்பான வழக்கில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.
இவர் நீதிமன்றத்துக்கு வரும்போதெல்லாம் ஏதாவது செய்து தன் பக்கம் அனைவரது கவனத்தையும் திருப்புகிறார். முதலில் மொட்டை அடித்துக் கொண்டு வந்தார். ஒரு முறை தனக்கு சாமி வந்ததாகக் கூறி நீதிமன்ற வளாகத்திலேயே குறி சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்பு தியானத்தில் ஈடுபட்டார். நிர்மலா தேவி மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் (அக்டோபர் 9) நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்பொழுது வழக்கு விசாரணை தொடங்கியதும் நீதிமன்றத்திற்குள் பேராசிரியை நிர்மலா தேவி திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்த பெண் காவலர்கள் நிர்மலா தேவியை மீட்டு வெளியே அழைத்து வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், ”குற்றவாளியைத் தப்ப வைப்பதற்காகவே நிர்மலா தேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நிர்மலா தேவி தனக்கு மிரட்டல் வருகிறது, பயமாக இருக்கிறது என கூறுகிறார். அவர் எப்போதும் குழப்பமாகவே இருக்கிறார். தனது குழந்தைகளுக்கு ஆபத்து இருக்கிறது என்றும் கூறுகிறார். அரசியல் உச்சத்தில் இருப்பவர்கள் தப்பிப்பதற்காகவே நிர்மலா தேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.
மயங்குவதற்கு முன்னதாக மாணவிகளை என் குழந்தைகளாகத்தான் பார்த்தேன் என்று நிர்மலா தேவி தெரிவித்திருக்கிறார்.
�,”