கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நிர்மலா தேவியை அதிமுக அமைச்சர் ஒருவர் மிரட்டி வருவதாக நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக, அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர் இதுதொடர்பான வழக்கில் ஆஜராகி வந்தார். கடந்த 18ஆம் தேதி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது அவர் ஆஜராகவில்லை. அவரது ஜாமீனை ரத்து செய்த நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 25) அவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து மதுரை அழைத்து வரப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், நிர்மலா தேவியைக் கடத்தல்காரர் போல் சிபிசிஐடி போலீசார் அழைத்து வந்தனர். நீதிமன்றத்துக்கு வரும்போதே அவர் கைது செய்யப்பட்டது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மதுரையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தன்னை மிரட்டுவதாக ஏற்கனவே நிர்மலா தேவி கூறியிருந்தார்.
நீதிமன்றத்தில் ஆஜரானால் அவரது குடும்பத்தை சீரழிப்பதாகவும், குழந்தைகளைக் கடத்தி விடுவதாகவும், நிர்மலா தேவி மீது ஆசிட் வீசி கொன்றுவிடுவதாகவும் மிரட்டுவதாக ஏற்கனவே அவர் என்னிடம் தெரிவித்திருக்கிறார்.
அந்தவகையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த அவரை கைது செய்தது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதுமட்டுமின்றி சிபிசிஐடி போலீசார் அவர் அழைத்து வரும் போது அழுதுகொண்டே வந்தார். அது மேலும் சந்தேகத்தை எழுப்புகிறது. என்று தெரிவித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த அந்த அமைச்சர் பாதி நாட்கள் தாடி வைத்திருப்பதாகவும், மீத நாட்கள் சாதாரணமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
�,