சென்னை பெரம்பூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட புதிய நீலகிரி மலை ரயில் பெட்டிகள் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மலை ரெயில் பெட்டிகள் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயிலில் இணைக்கப்படும் என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதில் பயன்படுத்தப்படும் ரயில் பெட்டிகள் மிகவும் பழமையானவை என்பதால் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புதிய ரயில் பெட்டிகளை தயாரிக்க ரயில்வே துறை முடிவு செய்தது.
அதன்படி சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்பு ரயில் பெட்டி தொழிற்சாலையில் நீலகிரி மலை ரயிலுக்காக 28 பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. அவை பல்வேறு காலகட்டங்களில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த புதிய ரயில் பெட்டிகள் பயணிகள் உட்கார வசதியாகவும், இயற்கை காட்சிகளை ரசிக்க வசதியாகவும் பெரிய ஜன்னல், கண்ணாடிகளுடன் உள்ளன.
இந்த நிலையில் புதிதாக தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் பிரேக் பிடித்தல், தரம், செங்குத்தான மலைப் பகுதிகளில் செல்லும்போது பெட்டிகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ ஆர்டிஎஸ்ஓ பரிசோதனை திட்ட ரயில்வே இயக்குநர் அனஞ்செய் மிஸ்ரா தலைமையில் 13 பேர் கொண்ட குழுவினர் மேட்டுப்பாளையம் வந்துள்ளனர்.
அனஞ்செய் மிஸ்ரா உட்பட அதிகரிகள் குழுவினர் மேற்பார்வையில் புதிதாக தயாரிக்கப்பட்ட நான்கு பெட்டிகள் மலை ரயில் என்ஜினில் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு புதிய பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டமாகப் புறப்பட்டது. மலைப்பகுதியில் ரயில் செல்லும்போது வேகம், பிரேக் பிடித்தல், தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நேற்று முதல் அடுத்த மாதம் (மே) 8ஆம் தேதி வரை பல கட்டமாக சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த பிறகு புதிதாக தயாரிக்கப்பட்ட மலை ரெயில் பெட்டிகள் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயிலில் இணைக்கப்படும் என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
**-ராஜ்-**
.