முடங்கிய நீலகிரி தைல உற்பத்தி!

Published On:

| By Balaji

நீலகிரியில் அமல்படுத்தப்பட்டு வரும் முழு ஊரடங்கால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ள நிலையில் நீலகிரி தைல உற்பத்தி முடங்கியுள்ளது. இதனால் 20,000 தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.

நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் அரிய வகை மரங்களும், தாவரங்களும் காணப்படுகின்றன. இங்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் யூகலிப்டஸ் மரங்கள் அதிகளவில் நடவு செய்யப்பட்டன. இந்த மரங்களில் காய்ந்து உதிரும் இலைகளைக் கொண்டு தைலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த தைலமானது சளி, இருமல், உடல்வலி போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரக்கூடியதாகக் கூறப்படுகிறது. வனப்பகுதியில் உதிர்ந்து கிடக்கும் யூகலிப்டஸ் இலைகளைச் சேகரித்து வழங்கும் தொழிலில் 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், அதைக்கொண்டு தைலம் உற்பத்தி செய்யும் தொழிலில் 3,000க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஆங்காங்கே ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் தைலமானது மும்பை, புனே, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கொரோனா பரவலுக்கு முன்பு வரை மாதத்துக்கு 5 டன் முதல் 6 டன் வரை தைலம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

ஆனால், கொரோனா பரவலுக்குப் பிறகு ஊரடங்கால் போக்குவரத்துக்குத் தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீலகிரிக்கு தைலம் கொள்முதல் செய்ய வியாபாரிகளால் வர முடியவில்லை. மேலும் இலைகள் சேகரிக்க வனப்பகுதிக்குச் செல்ல முடியாத நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர். இதனால் தைல உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தைலம் உற்பத்தியாளர்கள், “ஆரம்ப காலத்தில் நீலகிரி தைலத்துக்கு தனி மவுசு இருந்தது. நாளடைவில் சீனாவில் இருந்து தைலம் இறக்குமதி செய்யப்பட்டதால், நீலகிரி தைலம் விற்பனை குறைந்தது.

மேலும், ஒரு லிட்டர் ரூ.1,600-க்கு விற்கப்பட்டு வந்த நிலை மாறி ரூ.950-க்கு விற்கும் நிலை வந்தது. எனினும் உற்பத்தியைத் தொடர்ந்து வந்தோம். ஆனால் ஊரடங்கால் உற்பத்தி முடங்கிவிட்டது. மேலும் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் வேலையிழந்து உள்ளனர். தற்போது மாதத்துக்கு 2 டன் தைலம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

தைல உற்பத்திக்கு தேவையான பொருட்கள் வாங்க வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். எனவே எங்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும்” என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share