புதிய செயலி: காவல் நிலையத்துக்கு வராமலேயே புகார் அளிக்கலாம்!

Published On:

| By Balaji

காவல் நிலையத்துக்கு வராமலேயே மக்கள் புகார் அளிக்கும் வகையிலும், சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வசதியாகவும் நீலகிரி காவல் துறை சிறப்புச் செயலி ஒன்றை நேற்று (ஆகஸ்ட் 24) அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக பொதுப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களின் அன்றாடப் பணிகளுக்கு வெளியில் செல்ல முடியாமல் இருக்கின்றனர். கொரோனா காலத்தில் குற்றச் சம்பவங்கள் சற்று அதிகரித்தாலும், மக்கள் புகார் அளிக்க, காவல் நிலையங்களுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் நீலகிரி காவல் துறை சிறப்புச் செயலி ஒன்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறது. இதை நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தொடங்கிவைத்தார்.

Nilgiris District Poilce என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் செயலியின் சிறப்பம்சங்கள் குறித்து பேசியுள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சசி மோகன், “நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், தேவாலா போன்ற தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேரடியாகப் புகார் அளிப்பதற்காக மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு வருகின்றனர். தூரத்திலிருந்து வருவதால் நேர விரயம், தாமதம், வீண் அலைச்சல் போன்ற பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர். மேலும், தற்போது கொரோனா தொற்று இருப்பதால் பயணம் செய்து வந்து புகார் அளிப்பதில் சிக்கல் உள்ளது. இதைத் தவிர்க்கும் பொருட்டு நீலகிரி மாவட்டக் காவல் துறைக்கென தனியாக பிரத்யேக மொபைல் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இதைப் பயன்படுத்தி, நேரடியாக வராமல் செயலி மூலமாகப் புகார் அளிக்கலாம். மேலும், வருங்காலங்களில் நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சுலபமாகத் தங்களது புகார்களை இந்தச் செயலி மூலம் அளிக்க முடியும்.

செயலி மூலம் பெறப்படும் புகார்கள் நேரடியாக இதற்கென நிறுவப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு நேரடியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் செயலியில் நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்துக் காவல் அதிகாரிகள், காவல் நிலையங்கள், சிறப்புப் பிரிவுகள் உட்பட அனைத்து விவரங்களும் தொலைபேசி எண்களும் உள்ளன.

சுற்றுலாப் பயணிகள் தாங்கள் விருப்பப்பட்டுச் செல்ல வேண்டிய சுற்றுலாத்தலங்களின் விவரங்கள், தங்கள் இடத்தின் அருகிலுள்ள காவல் நிலையம், பஸ் நிலையம், வாகன நிறுத்துமிடங்கள், ஏ.டி.எம் ஆகியவை குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தச் செயலியை பொதுமக்கள் பயன்படுத்திப் பயன்பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு 2019 டிசம்பர் மாதம், பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவரும் நிலையில் அவசர நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாகத் தமிழகக் காவல்துறை காவலன் SOS என்ற ஆப்பை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share