pதீவிரவாத தொடர்பு: 6 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

Published On:

| By Balaji

தமிழகத்தில் 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (அக்டோபர் 31) காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ. ) சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இலங்கையிலிருந்து வந்து தீவிரவாதிகள் கோவையில் ஊடுருவியிருப்பதாக வந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சமீப நாட்களாக என்.ஐ.ஏ சோதனையைத் தீவிரப்படுத்தியது.

தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவர்கள், இலங்கை குண்டுவெடிப்புக்கு தொடர்புடையவர்கள் எனச் சந்தேகித்து பலரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அடுத்தடுத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை உக்கடம் பகுதி ஜி.எம்.நகரைச் சேர்ந்த சமீர் (22), உக்கடம் முதல் வீதி அண்ணா நகரைச் சேர்ந்த சவுரிதீன் (30) ஆகியோர் வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

கோவையைத் தவிர, நாகப்பட்டினம், நாகூர் அருகே மியான் தெருவில் உள்ள முகமது அஜ்மல் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து முகமது அஜ்மலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் திருச்சி, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.

இலங்கை குண்டுவெடிப்பு மட்டுமின்றி, இந்து அமைப்பின் தலைவர்களை கொலை செய்யத் திட்டம் தீட்டியது தொடர்பாகவும் சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share