கத்தார் நாட்டில் தோகாவில் தற்போது நடைபெற்று வரும் 14ஆவது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 14 வயது சிறுமி 3 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரை சேர்ந்த இஷா சிங்(14) என்ற பெண் வீராங்கனை ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் பங்கேற்று 3 தங்கப் பதக்கங்களை வென்று குவித்துள்ளார். 14 ஆவது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில், ஜூனியர் பெண்கள் பிரிவில் தனிநபர், அணி மற்றும் கலப்பு பிரிவுகளில் விளையாடிய இஷா சிங், இந்த மூன்று ஆட்டங்களிலும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
14 வயதில் துப்பாக்கிச் சுடுதலில் இவ்வளவு பெரிய வெற்றியை பெறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. இதுகுறித்து இஷா சிங் கூறுகையில், ” எனது பயணம் என்பது எளிதான ஒன்றல்ல. ஏதாவது வெற்றிபெற விரும்பினால், நீங்கள் ஒரு கடினமான தருணங்களை கடந்து செல்லத்தான் வேண்டும். அதன்படி நான் நண்பர்களுடன் வெளியே சென்றதில்லை. திரைப்படங்களுக்குச் சென்றதில்லை. திருமணங்கள், திருவிழாக்கள் போன்ற எந்த ஒரு குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் இல்லை. ஏனெனில் எனது போட்டிக்காக நான் நிறைய பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதையெல்லாம் இழந்தாலும், அந்த போட்டியில் வெற்றி பெறும் போது ஏற்படும் திருப்தி அதிகம்” என்று தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி சுடுதலில் எனது பயணம் 9 வயதில் இருந்தே தொடங்கியது. 10 வயதில் துப்பாக்கி சுடுதலில் ஜூனியர் பிரிவில் தங்கம் வென்றேன் என்று பெருமிதம் தெரிவித்த இஷா சிங், 2022ஆம் ஆண்டு நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே, தனது இலக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இஷா சிங்கின் பயிற்சியாளர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுந்தர் கத்தே, இஷாவின் திறமை குறித்து கூறுகையில், “கடந்த 4 ஆண்டுகளாக நான் அவருக்கு பயிற்சி அளிக்கிறேன். அவர் விளையாட்டில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார். அறிவுறுத்தல்களை சரியாக பின்பற்றுவார். துப்பாக்கிச் சுடுதலில் காயங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. ஆனால் அனைத்து முரண்பாடுகளையும் அவர் துணிச்சலாக எதிர்கொள்வார்” என்று தெரிவித்தார்.
�,