ஒமிக்ரான்: உலக சுகாதார நிறுவனம் புதிய எச்சரிக்கை!

Published On:

| By Balaji

டெல்டா வகை வைரஸை விட ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்ந்து பல உருமாற்றம் அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஒமிக்ரான் எனும் தொற்று 63 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை 38 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று எந்தளவுக்கு வேகமாக பரவும், அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஒமிக்ரான் டெல்டா வைரஸை விட நன்கு வளர்ச்சி பெற்றதாக காணப்படுகிறது. டெல்டா வைரஸ் பரவல் குறைவாக உள்ள தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் அதிவேகத்தில் பரவி வருகிறது. அதுபோன்று டெல்டா வைரஸ் அதிகளவில் பரவி வரும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் ஒமிக்ரான் அதிவேகமாக பரவி வருகிறது.

ஒமிக்ரான் மாறுபாடு தடுப்பூசிகளின் செயல்திறனைக் குறைக்கும். ஆனாலும், குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தும் என முதற்கட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஒருவேளை ஒமிக்ரான் சமூக பரவலாக மாறினால், டெல்டா வகை கொரோனாவை விட அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தலாம். இருப்பினும், போதுமான தரவுகள் இல்லை என்பதால் ஒமிக்ரான் தொற்றால் ஏற்படக்கூடிய பாதிப்பின் வீரியத்தை உறுதியாக கூறமுடியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் ஒமிக்ரான் பேரலையாக வந்து கொண்டிருக்கிறது. தொற்று வேகமாக பரவி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1898 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது. இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதனால், நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

**பூஸ்டர் டோஸ்**

ஒமிக்ரான் அச்சுறுத்தலால் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது டோஸை செலுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் ஒமிக்ரானுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது. அதாவது பூஸ்டர் டோஸ் ஒமிக்ரானுக்கு எதிராக 70-75 சதவிகித பாதுகாப்பை வழங்குகிறது என்று வைராலஜிஸ்டுகள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக இங்கிலாந்து சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. எந்தவொரு தடுப்பூசியும் ஆன்டிபாடியின் அளவை உயர்த்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் அச்சத்தால் இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்த அவசரம் காட்ட வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதாக இருந்தால் ஏற்கனவே போடப்பட்ட முதல் இரண்டு தடுப்பூசிக்கு பதிலாக மூன்றாவது ஒரு புதிய தடுப்பூசிதான் போடப்பட வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share