வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

Published On:

| By Balaji

சர்வதேச நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் 7 நாட்கள் கட்டாய வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.

ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. மீண்டும் கொரோனா தொற்று உச்சமடைந்து வருவதால் மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. சில நாடுகள் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நாடுகளுக்கு விமான போக்குவரத்தை தடை செய்துள்ள நிலையில், இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள விமானப் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளில், ”ஒமிக்ரான் பரவல் அதிகமாக காணப்படும் ஹை-ரிஸ்க் நாடுகள் பட்டியலில் மேலும் 9 நாடுகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 19 நாடுகள் ஆனது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, கானா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, தான்சானியா, ஹாங்காங், இஸ்ரேல், காங்கோ, எத்தியோப்பியா, கஜகஸ்தான், கென்யா, நைஜீரியா, துனிசியா மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, ஜனவரி 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் ஹை-ரிஸ்க் பட்டியலில் உள்ள வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில் தொற்று உறுதி செய்யப்படவில்லையென்றால், ஏழு நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். எட்டாவது நாளில் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு கொரோனா உறுதியானால் அவர்கள் தனிமைப்படுத்துதல் மையத்துக்கு அனுப்பிவைக்கப்படுவர். அவர்களுடைய மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். பரிசோதனையில் நெகடிவ் என்று வந்தவர்கள் அடுத்த ஏழு நாட்களுக்கு தங்களை சுயகண்காணிப்பு செய்துக் கொள்ள வேண்டும். அப்போது ஏதாவது உடல்நலக்குறைவு அல்லது அறிகுறி தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

அதேசமயம், நான்-ரிஸ்க் நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகளில் தோராயமாக இருவர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அவர்களுக்கும் மேலே சொன்ன விதிமுறைகள் பொருந்தும். இந்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வருகிற 11 ஆம் தேதி முதல் அடுத்த உத்தரவு வரும்வரை அமலில் இருக்கும்” என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share