�
சென்னையிலும் அதைச் சுற்றியிலுள்ள சில பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் மேக மூட்டத்துடன் மிக லேசான மழை பெய்துவரும் நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (ஆகஸ்ட் 18) உருவாகிறது என்றும் இதனால் தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதிகளில் வரும் 19ஆம் தேதி (நாளை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக இன்று வடக்கு வங்கக் கடல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இதேபோல் நாளை 19ஆம் தேதி வடக்கு வங்கக் கடல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
இன்று முதல் 19ஆம் தேதி வரை கர்நாடகா முதல் குஜராத் கடலோர பகுதி வரையிலும், 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இரவு 11.30 மணி வரை 2.5 மீட்டர் முதல் 3.1 மீட்டர் உயரம் வரை கடல் அலை எழும்பக்கூடும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.�,