பொது இடங்களில் தேர்தல் பரப்புரைகளில் வெறுப்புப் பேச்சுகள் பேச தடைவிதித்து புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று (பிப்ரவரி 28) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்தியாவில் அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் அண்மைக்காலங்களில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், இனி வரும் காலங்களில் மக்கள் நட்புடனும், நல்லிணக்கத்துடனும் வாழ முடியுமா என்பதே ஐயமாகியிருக்கிறது. வெறுப்பு பேச்சு, வெறுப்பு பிரச்சாரம் ஆகியவற்றால் அடிக்கடி மோதல்கள் நிகழ்வது வாடிக்கையாகி விட்டன. இத்தகைய வெறுப்பு பேச்சும், வெறுப்பு பிரச்சாரமும் அரசியல் தளங்களிலும், சமூக தளங்களிலும் நுழையும் போது தான் மிகவும் மோசமானதாக மாறுகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் மோதல்களுக்கு இத்தகைய வெறுப்பு பிரச்சாரங்கள் முக்கிய காரணமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.
மேலும் அவர், “தேர்தலின் போது வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டு, வாக்குகளை வாங்கத் துடிப்பதை சில கட்சிகள் வாடிக்கையாகவே வைத்துள்ளன. இத்தகைய பிரச்சாரத்தை செய்வதற்காக கோடிகளை கொட்டிக் கொடுத்து தனியார் அமைப்புகளை நியமிக்கும் கட்சிகளும் உள்ளன. தமிழ்நாட்டில் இத்தகைய வெறுப்புப் பிரச்சாரம் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு பதிலாக ஒரு தரப்பினர் குறித்து இன்னொரு தரப்பினர் மத்தியிலும், இன்னொரு தரப்பினர் குறித்து முதல் தரப்பினர் மத்தியிலும் பொய்யான தகவல்களை பரப்பி பகைமைத் தீயை பற்ற வைக்கும் சதியில் சில கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இது ஆபத்தானது. பேச்சு சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டியது எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட வெறுப்பு பேச்சுகளும், வெறுப்பு பிரச்சாரமும் முறியடிக்கப்பட வேண்டியது முக்கியம் ஆகும். இதை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே உச்சநீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது” என்ற ராமதாஸ் அதுபற்றியும் விளக்கியுள்ளார்.
“இந்தியாவில் பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை தடுப்பதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டிருப்பதைப் போன்று, அனைத்து மக்களுக்கும் எதிரான வெறுப்பு பேச்சுகள் தடுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில், இந்தியாவில் அனைத்து பிரிவினருக்கும் எதிரான வெறுப்பு பேச்சுகளை தடுக்கும் நோக்கத்துடன் இந்திய தண்டனைச் சட்டத்தில் 153சி (இனம்,மொழி, மதம், சாதி,பாலினம், பிறப்பிடம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வெறுப்பைத் தூண்டுவதை தடுத்தல்), 505ஏ (அச்சத்தை தூண்டுதல் மற்றும் வன்முறைக்கு வித்திடுதல்) ஆகிய இரு பிரிவுகளை சேர்க்க வேண்டும்; அதற்கேற்றவாறு குற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும். இந்த பரிந்துரைகளை 2017 மார்ச்சில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட 267-ஆவது அறிக்கையில் இந்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
அதனடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் ‘குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்த மசோதா’வை 2018 ஆம் ஆண்டில் தயாரித்தது. அந்த மசோதாவை சட்ட ஆணையத்தின் ஆய்வுக்கு அனுப்பிய மத்திய உள்துறை அமைச்சகம், வெறுப்புப் பேச்சுகள் குறித்து பேஸ்பரூவா குழு, டி.கே.விஸ்வநாதன் குழு ஆகியவற்றின் அறிக்கைகளையும் ஆய்வு செய்து, 153சி, 505ஏ ஆகிய இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளை வலுப்படுத்தித் தரும்படி கேட்டுக் கொண்டது. அதன்படி, சட்ட ஆணையம் திருத்தப்பட்ட பரிந்துரைகளை 2018ஆம் ஆண்டு மே மாதத்தில் வழங்கிய போதிலும் மசோதா நிறைவேற்றப்படவில்லை.
நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் வெறுப்பு பேச்சுகளும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தண்டனைகளுடன் கூடிய சட்டப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். எனவே, அனைத்துப் பிரிவினருக்கும் எதிரான வெறுப்பு பேச்சுகளைத் தடுக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தில் 153சி, 505ஏ ஆகிய பிரிவுகளை சேர்ப்பதற்கான குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்த மசோதாவை அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார் ராமதாஸ்.
சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த கலவரங்கள் பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சால் ஏற்பட்டது என்று கருதிய டெல்லி உயர் நீதிமன்றம், வெறுப்புப் பரப்புரை செய்த பாஜா தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில் வெறுப்புப் பேச்சுகளை தடை செய்ய தனி சட்டம் வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியது பாஜகவுக்கு எதிரான கருத்தே என்று அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.
-**வேந்தன்**�,