வங்கக்கடலில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. நேற்றும் இன்றும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவு நின்று வெயில் முகம் தெரிய ஆரம்பித்துள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”வங்கக் கடலில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. நவம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக் கூடும்.
இதன் காரணமாக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் , ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.
நாளையும் கன்னியாகுமரி ,திருநெல்வேலி ,தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும். வருகிற நவம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக குமரிக்கடல்,மன்னார் வளைகுடா மற்றும் தென்கிழக்கு கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால், நவம்பர்17ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த தொடர் கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
**-வினிதா**
�,