ஜே.என்.யு வன்முறை: மாணவியின் புகைப்படத்தை வெளியிட்ட போலீஸ்!

public

ஜே.என்.யு பல்கலையில் மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் தான் காரணம் என்று டெல்லி போலீஸ் சிலரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

கல்விக்கட்டண உயர்வை எதிர்த்துப் போராடி வந்த ஜே.என்.யு மாணவர்கள் மீது கடந்த ஜனவரி 5ஆம் தேதி முகமூடி அணிந்த மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் பல மாணவர்கள் காயமடைந்தனர். பல்கலை விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் மாணவர் சங்கத் தலைவி ஆயிஷி கோஷ் உள்பட பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்த தாக்குதலுக்குக் காரணம் என்று இடதுசாரி மாணவர்கள் அமைப்பும், அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் அமைப்பும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டினர். ஆனால் இந்து ரக்ஷா தளம் அமைப்பினர் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றனர்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் விசாரித்து வந்தது. சிசிடிவி காட்சிகள் பதிவாகும் சர்வர் அறை சேதமடைந்ததால் உரிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் யார் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதைக் கண்டறியச் சிரமமாக இருப்பதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் ஜே.என்.யு தாக்குதல் தொடர்பான பல வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகின.

இந்நிலையில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது இவர்கள் தான் என 9 பேரின் புகைப்படங்களையும், பெயரையும் டெல்லி காவல் துறை நேற்று வெளியிட்டது. இதில் 7 பேர் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் 2 பேர் ஏபிவிபி சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. சுன்சுன் குமார், பங்கஜ் மிஸ்ரா, ஆயிஷி கோஷ், வஸ்கர் விஜய், சுச்சேட்டா, பிரியா ரஞ்சன், டோலன் சமந்தா, யோகேந்திர பரத்வாஜ், விகாஸ் பட் ஆகியோரின் பெயர் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் மாணவர் சங்கத் தலைவி ஆயிஷி கோஷும் தாக்குதலில் ஈடுபட்டதாக டெல்லி காவல்துறை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆயிஷி கோஷ், காவல் துறை வெளியிட்ட புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை. குண்டர்களால் நான் எப்படித் தாக்கப்பட்டேன் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. காவல்துறை பாரபட்சமாக நடந்து வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *