இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா தடுப்பூசி

Published On:

| By admin

இந்திய அறிவியல் கழகத்துடன் இணைந்து தடுப்பூசி தயாரிப்பில் தொடக்கநிலை நிறுவனமாக உள்ள ‘மைன்வேக்ஸ்’, கடந்த ஓராண்டாக வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் திறனுள்ள கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்த தடுப்பூசியை குளிர் நிலையில் வைத்து பாதுகாக்க வேண்டிய தேவை இருக்காது. சாதாரண அறை வெப்பநிலையில் வைத்து பயன்படுத்தலாம்.

இந்த தடுப்பூசி விலங்குகளிடம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டு விட்டது.அடுத்தகட்டமாக மனிதர்களிடம் முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.

கொரோனா வைரசின் செல்லில் உள்ள ஸ்பைக் புரதம் மனித செல்களில் அந்த வைரஸ் தொற்றிக்கொள்ள வழிவகை செய்கிறது. இந்த தடுப்பூசி அந்த ஸ்பைக் புரதத்தை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த கொரோனா தடுப்பூசி, கொரோனா வைரசுக்கு எதிராக மிகுந்த திறன் வாய்ந்ததாக இருப்பதை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்த தடுப்பூசியை 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 4 வாரங்கள் வரை பயன்படுத்தலாம். 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 90 நிமிடங்கள் அதாவது ஒன்றரை மணி நேரம் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய வெப்பத்தை தாங்கும் திறன் கொண்ட தடுப்பூசிகளை விலையுயர்ந்த குளிரூட்டும் கருவிகள் இல்லாமல் தொலைதூரப் பகுதிகளுக்கு சேமித்து கொண்டு செல்ல முடியும்.

தடுப்பூசி பயன்பாட்டை பொறுத்தமட்டில், ஏழை நாடுகளில் 100 பேருக்கு 14 டோஸ் தடுப்பூசி என்ற கணக்கில் தான் தடுப்பூசி பயன்பாடு உள்ளது. அதேசமயம், வளர்ந்த பணக்கார நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் 100 பேருக்கு 182 டோஸ் தடுப்பூசி என்ற விகிதத்தில் தடுப்பூசி பயன்பாடு உள்ளது. குளிரூட்டும் கருவிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவில் வசதிகள் இல்லாத நாடுகளுக்கு மைன்வேக்ஸ் போன்ற தடுப்பூசிகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share