தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் நெல்சன் மண்டேலாவின் மகளும் நிறவெறிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலருமான வின்னி மடிகிசெலாவின் மகளுமான ஜிண்ட்ஸி மண்டேலா தனது 59 வயதில் இறந்தார்.
2015ஆம் ஆண்டு முதல் டென்மார்க்கிற்கான தென்னாப்பிரிக்காவின் தூதராக பணியாற்றி வரும் ஜிண்ட்ஸி மண்டேலா, நேற்று(ஜூலை 12) மாலை ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார் என்று செய்தி நிறுவனமான SABC இன்று தெரிவித்துள்ளது. ஆனால், அவரது மரணத்திற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை.
ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் புலே மாபே, ஜிண்ட்ஸியின் மரணம் அகாலமானது என்று விவரித்தார். மேலும், எங்கள் சொந்த சமுதாயத்தின் மாற்றத்தில் அவருக்கு எப்போதும் பங்கு உண்டு. ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் கூட அவரது பங்கு பெரியளவில் உள்ளது” என்று கூறினார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஈஸ்வதினி (முன்னர் ஸ்வாசிலாந்து) ஆகிய நாடுகளில் படித்த ஜிண்ட்சி மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் சுதந்திரப் போராட்டத்தில் பல ஆண்டுகள் ஈடுபட்டார். மேலும் கலை, வணிகம் ஆகிய துறைகளில் முக்கியப் பாத்திரங்களை வகித்தார்.
பிப்ரவரி 1985 இல் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் சிறையில் இருந்து நெல்சன் மண்டேலாவை நிபந்தனையுடன் விடுதலை செய்ய அன்றைய ஜனாதிபதி பி.டபிள்யூ. போத்தாவின் வாய்ப்பை மண்டேலா நிராகரித்தார். அப்போது தனது தந்தை விடுதலையை நிராகரித்ததை பொதுவெளியில் வாசித்த ஜிண்ட்ஸி சர்வதேச முக்கியத்துவம் பெற்றார். தென் ஆப்பிரிக்காவுக்கும் டென்மார்க்குக்கும் இடையிலான வலுவான நட்பை வளர்க்க ஜிண்ட்ஸி அயராது உழைத்தவர் என டென்மார்க் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜிண்ட்ஸி மண்டேலாவுக்கு கணவர் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் சார்பில் ஜின்ஸி மண்டேலாவின் மரணம் பற்றிய உடனடி அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும்,விரைவில் அனைத்தும் சரியான விவரங்களுடன் அறிவிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,”