கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்று திட்டவட்டமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் 14 லட்சம் பேர் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்திருப்பதாகத் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இதனிடையே செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு எதிர்ப்புக் குரல்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஒரு சேர எழுந்துள்ளன. கொரோனா பரவல் காரணமாக, மாணவர்களின் நலன் கருதி மே, ஜூன் மாதத்தில் நடத்தப்படவிருந்த தேர்வைச் செப்டம்பருக்கு ஒத்தி வைத்தது மத்திய அரசு. இந்நிலையில் கொரோனா பரவல் மே, ஜூன் மாதத்தை விட அதிகரித்துள்ள நிலையில் தற்போது மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்களா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், புதுச்சேரி, ஜார்க்கண்ட் ஆகிய மாநில முதல்வர்கள் உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்து வழக்குத் தொடரவுள்ளன.
இந்நிலையில் தமிழக அரசும் இந்த மாநிலங்களோடு இணைந்து நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் கூறுகையில், நீட் தேர்வை எதிர்ப்பதாக நாடகம் ஆடி ஏமாற்றிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு இப்போது என்ன செய்யப் போகிறது? நீட் தேர்வை எதிர்ப்பதும்- மாணவர்கள் மீதான அக்கறையும் உண்மையெனில் தமிழக அரசும் மற்ற மாநில அரசுகளைப் போல உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும். நீட் தேர்வை ஒத்திவைப்பது என்பது தி.மு.க.,வின் கொள்கையான ‘முழுமையாக நீட் ரத்து’ என்பதற்கான தொடக்கமாக அமையட்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு எழுதிய கடிதத்தில், “கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நடைபெற வேண்டிய நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வைக் கைவிட வேண்டும், மாநில வழிமுறைகளின்படி மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதியளிக்க வேண்டும் எனப் பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதம் குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா பரவலையும், மாணவர்களின் எதிர்காலத்தையும், அவர்களது ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதியது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால்; ஏழு மாநில அரசுகளைப் போலத் தமிழக அரசும் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும். ஆனால் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தையே மதிக்காதவர்கள் அமைச்சரின் இந்தக் கடிதத்தையா மதிக்கப் போகிறார்கள்? இம்மாதிரியான பொய், ஏமாற்றுகளை விட்டுவிட்டுச் செய்ய வேண்டியதை அமைச்சர் செய்ய வேண்டும்!” எனத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுபோன்று மாணவர்கள், பெற்றோர்கள் சார்பில், நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக அரசும் வழக்குத் தொடர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், “இப்போது தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தொட்டுவிட்டது. 140 பேர் பாதிக்கப்பட்ட போதும், 3975 பேர் பாதிக்கப்பட்ட போதும், 20,903 பேர் பாதிக்கப்பட்ட போதும் நடத்த முடியாத நீட் தேர்வை, தினசரி 70 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் போது மத்திய அரசு எவ்வாறு பாதுகாப்பாக நடத்தும்? இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு 16 லட்சம் பேரும், ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுக்கு சுமார் 10 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள தேர்வு மையங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, போதிய இடைவெளி விட்டு, இவ்வளவு பேரையும் பாதுகாப்பாக அமர்த்தி நுழைவுத்தேர்வு எழுத வைப்பது என்பது சாத்தியமே இல்லை.
கொரோனா அச்சம் காரணமாகப் பெரும்பான்மையான மாணவர்கள் எந்த நுழைவுத் தேர்வுக்கும் தயாராகவும் இல்லை. இன்னும் அவர்களின் பதற்றம் தணியாத நிலையில், இப்போது நுழைவுத்தேர்வு நடத்துவதால் மாணவர்களின் திறமையை அளவிட முடியாது. மாறாக, இந்த நேரத்தில் தேர்வு நடத்துவது கொரோனா வைரஸ் பரவலுக்கு மட்டும் தான் வழி வகுக்கும். எனவே, இந்த விஷயத்தில் தேவையற்ற பிடிவாதம் காட்டாமல் நீட் தேர்வையும், ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வையும் ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
**காங்கிரஸ் போராட்டம்**
கொரோனா பரவலுக்கு மத்தியில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடத்துவதைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 28ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மாநில தலைநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் எனக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
**-கவிபிரியா**�,